திறன்மிக்க விமானப் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் விமானி களை எவ்வாறு சிறப்பான முறையில் வேலைக்குத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கலாம் என்பது பற்றி சிங்கப்பூரில் அமைய உள்ள புதிய வட்டார மையம் ஆய்வு செய்யும்.
மேலும், ஆசிய பசிபிக் வட்டாரத்திற்குரிய பாதுகாப்பான விமானப் போக்குவரத்து குறித்தும் 'ஆசிய பசிபிக் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு மையம்' கவனம் செலுத்தும்.
தொடக்கத்தில், இந்த வட்டாரத்திற்கென உள்ள விமானப் போக்குவரத்து ஆபத்துகளை அடையாளம் காண்பதற்கான தரவுகளை இந்தப் புதிய மையம் ஒருங்கிணைக்கும்.
இதற்கு முன்னர் நிகழ்ந்த விபத்துகள் குறித்த தரவுகளையும் திரட்டி அது பகுப்பாய்வு செய்யும்.
பாதுகாப்பு தொடர்பான இலக்குகளை வரைவதோடு பாதுகாப்பான தலைமைத்துவத்தைப் பராமரிக்கத் தேவைப்படும் திறன்கள்மீதும் அது கவனம் செலுத்தும். அத்துடன், ஆசிய பசிபிக் வட்டார விமானப் போக்குவரத்தின் தர
நிலையை மேம்படுத்த மையம் முயலும்.
வட்டார விமானப் போக்கு
வரத்தின் மீட்சி முக்கியக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வான்வெளிப் போக்குவரத்து இதற்கு முன் இல்லாத வகையில் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் புதிய மையம் தொடங்கப்படு
வதற்கான அறிவிப்பை போக்கு
வரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அறிவித்தார். சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஆசிய பசிபிக் விமானப் போக்குவரத்துக்கான உச்சநிலைக் கூட்டத்தில் அவர் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
"பாதுகாப்பான விமானப் போக்குவரத்து என்பது நமது தலையாய, மறுக்கமுடியாத முன்னுரிமை," என்றார் திரு ஈஸ்வரன்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த முன்னுரிமை கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து மீண்டுவரும் தற்போதைய நிலைக்கு மட்டுமல்லாது நீண்டகால வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் உதவும்.
"விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பு மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறையுமானால், கொள்ளைநோயிலிருந்து மீண்டு வருவதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகிவிடும்.
"தொழில்நுட்ப அடிப்படை
யிலான புத்தாக்கங்களும் நடைமுறை மேம்பாடுகளும் விமானப் போக்குவரத்தை பாதுகாப்பாக நடத்த பல்லாண்டு காலமாகக் கைகொடுத்து வருவதை நாம் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியாது," என்றார் திரு ஈஸ்வரன்.
புதிய வட்டார மையத்தை 'ஃபிளைட் சேஃப்டி பவுண்டேஷன்' என்னும் லாப நோக்கமற்ற அமெரிக்க அமைப்பு நிறுவும்.
நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதோடு விமானத் துறையினருடனும் அத்
துறையின் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் பரிந்துரைகளை அந்த மையம் பகிர்ந்துகொள்ளும்.
இதன்வழி ஒருவரோடு ஒருவர் ஒத்துழைப்பதை அது ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மையத்தை நிறுவுவதற்கான ஆரம்பகட்டப் பணிகளுக்கும் அதன் நடவடிக்கைகளுக்கும் ஐந்து ஆண்டு காலத்திற்கு சிங்கப்பூர் விமானப் போக்கு
வரத்து ஆணையம் நிதி ஆதரவு வழங்கும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தனிச்சிறப்புமிக்க முகவையான அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பில் ஏறக்குறைய முப்பது ஆண்டு அனுபவம் பெற்றுள்ள திரு மிட்செல் ஃபாக்ஸ் சிங்கப்பூருக்கு இடமாறி, புதிய மையத்தின் முதல் இயக்குநராக அதன் தலைமைப் பொறுப்பை வகிப்பார்.
மையம் நிறுவப்பட்டு இயங்கத் தொடங்கியதும் சிங்கப்
பூரிலுள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி 'ஃபிளைட் சேஃப்டி பவுண்டேஷன்' ஆலோசிக்கும் என்று அதன் தலைவரும் தலைமை நிர்வாகியுமான டாக்டர் ஹசன் ஷாஹிடி கூறினார்.
சிங்கப்பூரில் ஆசிய பசிபிக் வட்டாரத்திற்கான அமைப்பு
