ராகுல் காந்திக்கு ஈராண்டுச் சிறை: குஜராத் நீதிமன்றம்

ராகுல் காந்திக்கு ஈராண்டுச் சிறை: குஜராத் நீதிமன்றம்

3 mins read
05d0550d-788a-473e-839f-99972b8bf134
-

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடியை அவ­ம­திக்­கும் கருத்­து­க­ளைக் கூறி­ய­தாக காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி மீது தொடுக்­கப்­பட்ட வழக்­கில் நேற்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

வழக்­கில் திரு ராகுல் குற்­ற­வாளி என்று அறி­வித்த குஜ­ராத் மாநி­லத்­தின் சூரத் நீதி­மன்­றம், அதன் தொடர்­பில் அவ­ருக்கு ஈராண்­டுச் சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

பிணை­யில் வெளி­வந்­துள்ள அவ­ருக்கு மேல்­மு­றை­யீடு செய்ய 30 நாள்­கள் அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு திரு ராகுல், பிர­த­ம­ரின் குடும்­பப் பெய­ரான 'மோடி' என்­பது குறித்து அவ­ம­திக்­கும் வித­மா­கப் பேசி­ய­தாக வழக்கு தொடுக்­கப்­பட்­டது. குஜ­ராத் மாநில சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான பூர்­ணேஷ் மோடி இந்த வழக்­கைத் தொடுத்­தார்.

கர்­நா­டக மாநி­லம் கோலா­ரில் 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற பேர­ணி­யில் உரை­யாற்­றிய ராகுல் காந்தி, "எப்­படி எல்­லாத் திரு­டர்­க­ளுக்­கும் மோடி என்றே குடும்­பப் பெயர் அமைந்­துள்­ளது?" என்று வினா எழுப்­பி­னார்.

மோசடி வழக்­கு­களில் சிக்கி லண்­ட­னுக்­குத் தப்­பிச் சென்ற வர்த்­த­கர்­கள் நிரவ் மோடி, லலித் மோடி ஆகி­யோ­ரைச் சுட்­டும் வித­மாக ராகுல் அவ்­வாறு கூறி­னார்.

இருப்­பி­னும், தேர்­த­லுக்கு முன்­னர் நடை­பெற்ற இந்­தக் கூட்­டத்­தில் பிர­த­மர் மோடியை அவ­ம­திக்­கும் வித­மா­கவே ராகுல் இவ்­வாறு சொன்­ன­தாக பார­திய ஜன­தாக் கட்­சி­யி­னர் குறை­கூ­று­கின்­ற­னர்.

நான்கு ஆண்­டு­க­ளாக இந்த கிரி­மி­னல் அவ­தூறு வழக்கு நடை­பெற்று வந்­தது.

கடந்த அக்­டோ­பர் 2021ல் ராகுல் இவ்­வ­ழக்கு தொடர்­பில் நீதி­மன்­றத்­தில் நேர­டி­யாக வாக்கு­மூ­லம் அளித்­தார்.

அதில், தாம் ஊழலை எடுத்­துக்­கூ­றும் வித­மா­கவே கருத்­து­ரைத்­த­தா­க­வும் எந்த சமூ­கத்­தி­ன­ருக்­கும் எதி­ரா­கப் பேச­வில்லை என்­றும் கூறி­னார்.

சென்ற வாரம் இரு தரப்பு வாதங்­களும் நிறை­வ­டைந்­தன. இந்த வழக்­கில் நேற்று தீர்ப்­ப­ளிக்­கப்­படும் என்­றும் அவ்­வேளை­யில் ராகுல் காந்தி நீதி­மன்­றத்­தில் இருக்க வேண்­டும் என்­றும் நீதி­பதி குறிப்­பிட்­டி­ருந்­தார். அதன்­படி ராகுல் நேற்று பலத்த பாது­காப்­பு­டன் சூரத் நீதி­மன்­றத்­திற்கு நேரில் சென்­றி­ருந்­தார்.

தீர்ப்பு வெளி­வந்த பிறகு திரு ராகுல் டுவிட்­ட­ரில், "எனது சம­யம், உண்மை, அகிம்சை ஆகிய பண்­பு­க­ளின் அடிப்­ப­டை­யி­லா­னது. உண்­மை­தான் எனது கட­வுள். அகிம்சை அதை அடை­வ­தற்­கான வழி," என்று குறிப்பிட்டு உள்­ளார்.

அவ­ரது சகோ­தரி பிரி­யங்கா காந்தி வத்ரா, "ஆட்­சி­யில் இருப்­போர் அச்­சம் கார­ண­மாக ராகு­லின் குரலை நசுக்­கப் பார்க்­கி­றார்­கள். எனது சகோ­த­ரர் முன்­னெப்­போ­தும் அஞ்­சி­ய­தில்லை. இனி­யும் அஞ்ச மாட்­டார்.

"நாட்டு மக்­க­ளுக்­கா­கத் தொடர்ந்து குரல் கொடுப்­பார். உண்­மை­யின் வலி­மை­யும் கோடிக்­க­ணக்­கான இந்­தி­யர்­களின் அன்­பும் அவ­ருக்­குத் துணை நிற்­கும்," என்று டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

இவ்­வே­ளை­யில், டெல்லி முதல்­வ­ரும் ஆம் ஆத்மி கட்­சித் தலை­வ­ரு­மான அரவிந்த் கெஜ்­ரி­வால் இந்­தத் தீர்ப்பை ஏற்­றுக்­கொள்ள இய­லாது என்று டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

பார­திய ஜனதா கட்சி சாராத அர­சி­யல் தலை­வர்­களைத் தேர்­தல் களத்­தி­ல் இருந்து அப்­பு­றப்­ப­டுத்­தும் நோக்­கில் சதித் திட்­டம் தீட்­டப்­ப­டு­வ­தாகக் கூறிய அவர், காங்கிரஸ் கட்சியுடன் தங்களுக்குக் கருத்து வேற்றுமை இருந்தாலும் ராகுல் இவ்வாறு நடத்தப்படுவது சரியல்ல என்றார்.

வழக்­கில் ராகுல் காந்­தி­யின் சார்­பாக வாதிட்ட வழக்­கறி­ஞர், "தொடக்­கத்­தில் இருந்தே இந்த வழக்­கில் குறை­பா­டு­கள் உள்­ளன. திரு காந்தி தம்மை அவ­ம­தித்­துப் பேசி­ய­தா­கப் பிர­த­மர் மோடி தான் புகார் அளித்­தி­ருக்க வேண்­டும். பூர்­ணேஷ் மோடி அல்ல," என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்ததாகக் கூறப்படும் வழக்கில் தீர்ப்பு