முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகள், முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் கட்டப்படும் பிடிஓ வீடுகளைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.
இருப்பினும், ஒட்டுமொத்த பொது வீடமைப்பு முறையில் சமத்துவத்தை உறுதி செய்ய முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் கட்டப்படும் பிடிஓ வீடுகளின் விலை தொடர்ந்து கட்டுப்படியானதாக இருக்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வலியுறுத்தியுள்ளார்.
முதிர்ச்சி அடைந்த குடி
யிருப்புப் பேட்டைகளில் தற்போது கூடுதல் பிடிஓ வீடுகள் கட்டப்படுவதை அவர் சுட்டினார். பிடிஓ வீடுகளை வாங்க தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் அனைவரும் வாங்கக்கூடிய அளவில் அனைத்துப் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும் கட்டுப்படியான விலையில் இருக்க வேண்டும் என்றார் திரு லீ.
இருப்பினும், வீடுகளின் விலையை நிர்ணயிக்கும்போது மற்ற காரணங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி
தழுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் லீ கூறினார்.
முதிர்ச்சி அடைந்த குடி
யிருப்புப் பேட்டைகளிலும் கூடுதல் வசதிகள் உள்ள பகுதிகளிலும் உள்ள வீடுகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது இயல்பு என்றும் இதை சிங்கப்பூரர்கள் ஏற்கின்றனர் என்று தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
கட்டுப்படியான விலையை நிலைநாட்டும் அதேவேளையில் வீடமைப்பு மானியங்கள், வீடமைப்புச் சந்தைத் தள்ளுபடிகள் நியாயமான வகையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதே பொது வீடமைப்புக் கொள்கையின் முக்கிய இலக்கு களில் ஒன்றாகும் என்றார் திரு லீ. பிடிஓ வீடு வாங்க தகுதி
பெறுவோருக்கான தகுதிநிலை மிகவும் அகண்டது என்று திரு லீ குறிப்பிட்டார்.
குறைந்த வருமானக் குடும்பங்களிலிருந்து மாதத்துக்கு அதிகபட்சம் $14,000 ஈட்டும் மேல் நடுத்தரக் குடும்பங்கள் வரை பிடிஓ வீடு வாங்க தகுதி பெறுவதாக அமைச்சர் லீ தெரிவித்தார்.
பிடிஓ வீடு வாங்க தகுதி
பெறுவோருக்கான மாதச் சம்பள வரம்பு 2019ஆம் ஆண்டில் $12,000லிருந்து $14,000ஆக உயர்த்தப்பட்டது. கூடுதல் வீடமைப்புச் சமத்துவம், முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்று. கூடுதல் வசதிகள், போக்குவரத்து இணைப்பு ஆகியவை இருந்தால் அது முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டையாக கருதப்படுகிறது. முதிர்ச்சி அடைந்த, முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளை வகைப்படுத்தும் முறை மறுஆய்வு செய்யப்படுவதாக திரு லீ தெரிவித்தார்.
முதிர்ச்சி அடைந்த, அடையாத குடியிருப்புப் பேட்டைகள் என்ற பிரிவு, வீடு வாங்குவோர் எடுக்கும் முடிவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் வீடுகளின் விலையிலும் தாக்கம் ஏற்படுகிறது.
"தற்போதை நடைமுறை தொடரட்டும் என்று அப்படியே விட்டுவிடுவது எளிது. ஆனால் மறுபரிசீலனை செய்வது முக்கியம் என்று நம்புகிறேன். முதிர்ச்சி அடைந்த, அடையாத குடியிருப்புப் பேட்டை என வகைப்படுத்தும் முறை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதை அப்படியே தற்போது கடைப்
பிடிக்காமல் தற்போதைய நடப்புக்கு தகுந்தாற்போல் மாற்றி அமைக்க வேண்டும்," என்றார் திரு லீ. குடியிருப்புப் பேட்டைகளை வகைப்படுத்தும் முறை 1992ஆம் ஆண்டில் தொடங்கியது. முதிர்ச்சி அடைந்த, அடையாத முறை என குடியிருப்புப் பேட்டைகளை வகைப்படுத்தும் முறை முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லீ தெரிவித்தார். இதுகுறித்து மறுஆய்வு செய்யப்படுவதாக அவர் கூறினார்.
முதிர்ச்சி அடைந்த குடி
யிருப்புப் பேட்டைகளில் பல கட்டடங்களும் வசதிகளும் ஏற்கெனவே இருப்பதால் அங்கு புதிய வீடுகள் கட்டுவது எளிதல்ல என்றார் திரு லீ. இதனால் முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் பிடிஓ வீடுகள் கட்டுவதில் கவனம் செலுத்துமாறு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால் தற்போதைய சூழலில் பிடிஓ வீடுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால் முதிர்ச்சி அடைந்த, அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் பிடிஓ வீடுகளைக் கட்ட வேண்டியதாக உள்ளது என்றார் அமைச்சர் லீ.

