சிங்கப்பூரின் எந்தப் பகுதியிலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் வசிப்போர்க்கு அவர்களின் குடியிருப்புப் பேட்டை சரியாகத் திட்டமிடப்பட்டது என்ற உத்தரவாதத்தைத் தர இயலும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.
அந்தப் பேட்டைகள் முறையாக நிர்வகிக்கப்படுகின்றன, அவற்றில் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று உறுதியாகக் கூறமுடியும் என்றார் அவர். நேற்று சொங் பாங் சிட்டி எனும் ஒருங்கிணைக்கப்பட்ட ஏழு மாடிக் கட்டடத்துக்கான நில அகழ்வு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
"சிங்கப்பூரின் சில குடியிருப்பு வட்டாரங்கள் மற்றவற்றைவிடப் புகழ்பெற்றவையாக இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் ஒவ்வொரு வீவக பேட்டையிலும் பள்ளிகள், மருந்தகங்கள், உணவகங்கள், விளையாட்டு வசதிகள், தரமான போக்குவரத்துத் தொடர்பு போன்ற வசதிகள் அமைந்திருப்பதை அரசாங்கம் உறுதிசெய்கிறது," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
"மக்கள் செயல் கட்சி அரசாங்கம் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் தரும் உறுதிமொழி இது," என்று கூறிய அவர், "உங்கள் வீவக அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வசிப்பதற்கு உரிய நல்ல இடம் என்பதோடு, ஓய்வுக்காலத்திற்குத் தேவைப்படும் மதிப்புமிகு சொத்தாகவும் விளங்கும்," என்று கூறினார்.
"சிங்கப்பூரர்களுக்கு நாட்டின் பொது வீடமைப்புத் திட்டம் குறித்து நன்றாகத் தெரியும். மக்கள் ஆதரவோடு அரசாங்கம் தொடர்ந்து இத்திட்டத்தை நல்ல முறையில் கடைப்பிடிக்கும். வருங்காலத்திலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து நிறைவேற்றுவதில் அரசாங்கம் முனைப்பாக உள்ளது," என்று திரு லீ தமது உரையில் குறிப்பிட்டார்.
ஈசூனில் கட்டப்படும் சொங் பாங் சிட்டி கட்டடம் 2027ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும். நாற்பது ஆண்டுப் பழைமையான அந்த அக்கம்பக்கப் பேட்டைக்குப் புத்துயிரூட்டும் வகையில் அதில் நீச்சல் குளங்கள், மெதுவோட்டத் தடங்கள், உடலுறுதிக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடம், கடைகள், பேரங்காடி போன்ற வசதிகள் அமைந்திருக்கும்.
புதுப்பிக்கப்பட்ட சொங் பாங் சமூக மன்றம், அதன் மேம்படுத்தப்பட்ட உணவங்காடி நிலையம், தற்போதைய சொங் பாங் சந்தை, உணவு நிலையம் ஆகியவையும் அதில் இடம்பெற்றிருக்கும்.
அரசாங்கம் சிங்கப்பூர் முழுவதிலும் வீடுகளை மட்டும் கட்டாமல், பழைய பேட்டைகளைப் புதுப்பிப்பதிலும் கவனம் செலுத்துகிறது என்பதற்கு சொங் பாங் சிட்டி நல்ல எடுத்துக்காட்டு என்றார் பிரதமர் லீ.
"பழையன, புதியன என்ற பாகுபாடின்றி நாட்டின் வீவக பேட்டைகள் அனைத்தும் உயர் தரத்தில் அமைந்திருப்பதே அரசாங்கத்தின் விருப்பம்," என்றார் அவர்.
நில அகழ்வு நிகழ்ச்சியில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகமும் கலந்துகொண்டார்.

