மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த சுகாதார வசதிகளைச் சீரமைக்க ஏறத்தாழ ஆறுமாத காலம் ஆகும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஜோகூரில் ஆறு இடங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. அதில் ஒன்று சுகாதார மருந்தகம். எஞ்சிய ஐந்தும் கிராமப்புற மருந்தகங்கள் என்று அறியப்படுகிறது.
சுகாதார வசதிகளுக்குக் கிட்டத்தட்ட 1.8 மில்லியன் ரிங்கிட் இழப்பு நேர்ந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சேதத்தைச் சரிசெய்ய சுமார் 750,000 ரிங்கிட் (S$225,760) செலவாகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அறைகலன்கள், சாதனங்கள், மருத்துவ ஆவணங்கள் போன்றவை சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட கிராமப்புற மருந்தகம் ஒன்றை நேற்று பார்வையிட்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மற்ற மருந்தகங்களிடமிருந்து இரவல் வாங்கிய பொருள்களைக் கொண்டு கிராமப்புற மருந்தகங்கள் தங்களின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, வெள்ள நெருக்கடியின்போது தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறியவர்களில் இறுதி 141 பேர் மீண்டும் வீடு திரும்பியுள்ளதால் அனைத்து நிவாரண நிலையங்களும் மூடப்பட்டதாக மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழு நேற்று தெரிவித்தது.
நிவாரண நிலையங்களில் தஞ்சம் புகுந்த இறுதி 37 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்று அறியப்படுகிறது.
ஜோகூரை வெள்ள நெருக்கடி தாக்கியபோது ஒரு கட்டத்தில் 50,000க்கும் மேற்பட்டோர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு 270 நிவாரண நிலையங்களில் தஞ்சம் புகுந்தனர்.
6,000 டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதற்கிடையே ஜோகூர் வெள்ளத்தால் உருவான சுமார் 6,000 டன் எடையிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குப்பைகள் அனைத்தும் நிலப்பரப்புத் தளங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
குப்பைகளை அனுப்பும் பணிகள் இம்மாதம் 3ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது.
இதற்கிடையே, அனைத்து கிராமங்களும் குப்பைகள் குவிந்திருக்காத வண்ணம் இருப்பதை உறுதிசெய்யும் சோதனை நடவடிக்கைகள் நடந்து வருவதாக அறியப்படுகிறது.
"வெள்ளத்தால் உருவான கழிவுப்பொருள்கள் அனைத்தும் உடனே அகற்றப்படுவதை நாங்கள் உறுதிசெய்து வருகிறோம். இதனால் வெள்ளப் பாதிப்புக்குள்ளானோரது சுகாதாரம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும்," என்றார் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நசிர்.
வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் தொடர்பான பணிகள் ஜோகூரில் வரும் மாதங்களில் தொடங்கிவிடும் என்று முன்னதாக மாநிலப் பயணத்துறை, சுற்றுச்சூழல், மரபுடைமை, கலாசார செயற்குழுத் தலைவர் ரவின் குமார் கூறியிருந்தார்.

