அதிமுக பொதுக்குழுத் தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) ஏழாவது பொதுச் செயலாளராக திரு எடப்பாடி பழனிசாமி (படம்) அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் சென்ற ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை (இபிஎஸ்) நியமித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானங்களை எதிர்த்து திரு ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சாதகமான தீர்ப்பு கிடைக்காததால் உச்ச நீதிமன்றத்திலும் முறையீடு செய்தார். அதிலும் அவர் வெற்றிபெறாத நிலையில், இம்மாதம் 26ஆம் தேதி கட்சிப் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
திரு பழனிசாமி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நிலையில் இந்த அறிவிப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இவற்றை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு நேற்று, இவ்வழக்குகளைத் தள்ளுபடி செய்தார்.
பொதுக்குழுத் தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.
பொதுச்செயலாளர் தேர்தலில் திரு பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவர் போட்டியின்றித் தேர்வானார்.
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.
கட்சித் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பொதுச்செயலாளர் சான்றிதழை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர். பின்னர் இபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடாடினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திரு பழனிசாமி, தம்மை ஒருமனதாகத் தேர்வுசெய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி எனக் கூறினார்.
பொதுச்செயலாளர் பதவி அதிமுகவின் அதிகாரமிக்க உயர்பதவியாகக் கருதப்படுகிறது.
கட்சியில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் இறுதியாக பொதுச்செயலாளரே கையெழுத்திட வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டு கட்சியைத் தொடங்கியதில் இருந்து ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் தாமே இப்பதவியை வகித்தார்.
பின்னர் நாவலர் நெடுஞ்செழியன், ப.உ. சண்முகம், ராகவானந்தம், மீண்டும் திரு எம்ஜிஆர், அவரது மறைவுக்குப் பிறகு ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குத் திருவாட்டி ஜெயலலிதா, அவரது மறைவுக்குப் பிறகு 48 நாள்கள் மட்டும் திருவாட்டி சசிகலா ஆகியோர் இந்தப் பதவியை வகித்துள்ளனர்.
இவ்வேளையில் நேற்றைய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வழக்கை இன்று விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

