ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக கட்டடத்தின் தரைத்தளத்துக்கு அருகில் ஒரு குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக 18 வயது பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். குழந்தையின் மரணம் இயற்கைக்கு மாறானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
புளோக் 166 ஹவ்காங் அவென்யூ 1ன் தரைத்தளத்துக்கு அருகில் குழந்தையின் சடலம் கிடப்பதாக நேற்று காலை 11 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
"சம்பவ இடத்தை அடைந்தபோது குடியிருப்புக் கட்டடத்தின் தரைத்தளத்துக்கு அருகில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது இறந்துவிட்டது என்று மருத்துவ உதவியாளர் சம்பவ இடத்திலேயே உறுதி செய்தார். இன்னொருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்," என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
பிற்பகல் 1.20 மணி அளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி
யாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது சடலத்தைப் பிறர் பார்க்க முடியாத வகையில் அதன் மீது காவல்துறைக்குச் சொந்தமான நீல நிற கூடாரம் போடப்பட்டு மறைக்கப்பட்டிருந்த தாகத் தெரிவிக்கப்பட்டது.
பிறகு அந்தக் கூடாரம் அகற்றப்பட்டபோது காவல்துறை அதிகாரி ஒருவர் அந்தக் குழந்தையின் சடலத்தைச் சிறிது நேரம் தூக்கி வைத்திருந்ததாகவும் அப்போது அது இளஞ்சிவப்புத் துண்டில் சுற்றப்பட்டிருந்ததாகவும் செய்தியாளர்கள் கூறினர். பிற்
பகல் 2.40 மணி அளவில் குழந்தையின் சடலத்தை இறுதிச் சடங்கு நடத்தும் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அங்கிருந்து கொண்டு சென்றனர். அந்தக் குடியிருப்புக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டுக்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் தடுப்பு போட்டனர். அந்த வீட்டுக்கு அருகில் உள்ள மின்தூக்கி முகப்புப் பகுதியில் ரத்தக் கறைகள் இருந்ததாகக் கூறப்பட்டது. இதேபோன்று வேறொரு சம்பவத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாசிர் ரிஸ் கடற்கரையில் குழந்தையின் சடலத்தை 10 வயது சிறுவன் ஒருவன் கண்டெடுத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சடங்கு நடத்தும் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் குழந்தையின் சடலத்தை சம்பவ இடத்திலிருந்து கொண்டு சென்றனர்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

