டிபிஎஸ் வங்கியின் மின்னிலக்கச் சேவைகள் நேற்று பல மணிநேர முடக்கநிலைக்குப் பிறகு வழக்க
நிலைக்குத் திரும்பின.
சேவை முடக்கம் 12 மணி நேரத்துக்கு மேல் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை 5.45 மணி நிலவரப்படி தனது மின்னிலக்கச் சேவைகள் (டிபிஎஸ்/பிஓஎஸ்பி டிஜிபேங்க் கைப்பேசி, இணைய வங்கிச் சேவை, டிபிஎஸ் பேலா, டிபிஎஸ்எம் டிரேடிங் சேவைகள்) வழக்கநிலைக்குத் திரும்பியதாக டிபிஎஸ் வங்கி தெரிவித்தது.
இருப்பினும், நிலைமையை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அது கூறியது.
டிபிஎஸ் மின்னிலக்கச் சேவை
களைப் பயன்படுத்த முடியாமல் வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் நேற்று காலை 7 மணியில்
இருந்து புகார் செய்யத் தொடங்கினர். டிபிஎஸ் டிஜிபேங்க் சேவை, வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 'பேலா' செயலி போன்ற மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. காலை 8.30 மணிக்குள் கிட்டத்தட்ட 360 புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து, தனது மின்னிலக்கச் சேவைகள் முடங்கியிருப்பதாக காலை 9.20 மணி அளவில் டிபிஎஸ் வங்கி உறுதி செய்து அறிக்கை வெளியிட்டது.
ஆனால் வாடிக்கையாளர்களின் சேமிப்புகள், பணம் பாதுகாப்பாக இருப்பதாக அது உறுதி அளித்தது.
வாடிக்கையாளர்கள் தங்கள் டிபிஎஸ்/பிஓஎஸ்பி அட்டைகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்யலாம் என்று அது கூறியது.
வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் டிபிஎஸ், பிஓஎஸ்பி கிளைகள் இயங்கும் நேரம் நேற்று இரண்டு மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டது.
மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவற்றைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்ய முடியாத வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளுக்கு நேரடியாகச் சென்று பரிவர்த்தனைகளைச் செய்ய உதவும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்ய உதவும் மின்னிலக்கச் சேவைகள் முடங்கியது குறித்து வாடிக்கையாளர்கள் பலர் அதிருப்தி தெரிவித்தனர். சேவை முடக்கம் காரணமாகத் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அசௌகரியம் குறித்து பலர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர். ஒருமுறை பயன்படுத்தும் மறைச்சொல் கிடைக்கவில்லை என்றும் தனிப்பட்ட அடையாள எண்ணை மாற்றுமாறு செயலி தெரிவித்தது என்றும் அவர்கள் குறைகூறினர். நேற்று நண்பகலில் கூட்டம் இல்லாததால் பசார் மாலாம் உணவுச்சந்தைக்குச் சென்ற குமாரி உபாசனா, 25, உணவை வாங்கிய பின் தனது வங்கிச் செயலி மூலம் பணம் செலுத்த முயன்றபோதுதான் அது வேலை செய்யாததை அறிந்தார்.
"வேறு வழியின்றி பக்கத்தில் இருந்த கடைத்தொகுதிக்குச் சென்று, அங்குள்ள தானியக்க வங்கி இயந்திரத்திலிருந்து பணம் எடுத்து வந்தேன். இதனால் கடைக்காரரும் மற்ற வாடிக்கையாளர்களும் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று," என்று குமாரி உபாசனா ஆதங்கப்பட்டார்.
பல் மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது பணம் கட்ட முடியாமல் தவித்ததாகக் கூறினார் குமாரி திவ்யாதாக்ஷாயினி, 26.
"பிறகு என் தாயாருக்குக் கடனட்டை பதிவுசெய்ய வங்கி இணையத்தளத்திற்குச் சென்றபோதும் எதுவும் வேலை செய்யவில்லை. வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைக்கூட என்னால் பார்க்க முடியாமல் போனது," என்றார் குமாரி திவ்யா.
டிபிஎஸ் வங்கியின் மின்னிலக்கச் சேவைகள் முடங்கியதால் மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தாம் தவித்ததாக மாவார் மமாட் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
டிபிஎஸ் வங்கியின் மின்னிலக்கச் சேவையைப் பயன்படுத்தி கட்டணங்களைச் செலுத்த காலை 8 மணியிலிருந்து கிட்டத்தட்ட ஏழு முறை முயன்றதாகவும் ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததாகவும் பொறியாளரான சு யுவான்சாங் பகிர்ந்துகொண்டார். "தனிப்பட்ட அடையாள எண்ணை மாற்றுமாறு வங்கியின் செயலி அடிக்கடி தெரிவித்தது. எனது பரிவர்த்தனைத் தொகை வரம்பை உயர்த்த விரும்பினேன். ஆனால் சேவையைப் பயன்படுத்த முடியவில்லை," என்று அவர் தெரிவித்தார்.
கூடுதல் செய்தி:
அனுஷா செல்வமணி

