தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஜோகூர்-சிங்கப்பூர் ரயில் பாதைக்கான கட்டுமானம் திட்டமிட்டபடி நடக்கிறது'

1 mins read
5ed14233-08e0-40c0-aec6-17d5e61992b6
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் இடையிலான விரைவு ரயில் பாதைக்கான கட்டமைப்பு திட்டமிட்டபடி 2026ஆம் ஆண்டுக்குள் நிறைவடைவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் இடையிலான விரைவு ரயில் பாதைக்கான கட்டமைப்பு திட்டமிட்டபடி 2026ஆம் ஆண்டுக்குள் நிறைவடைவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடந்துகொண்டிருப்பதால் அந்த இலக்கு எட்டப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"முன்பு சில இடையூறுகள் ஏற்பட்டன. அதனால் பணிகள் தாமதமடைந்தன. ஆனால் அவற்றை எம்ஆர்டி கார்ப் நிறுவனம் சரிசெய்து வருகிறது. பணிகள் திட்டமிட்டபடி நிறைவடைய எங்களால் ஆன அனைத்தையும் செய்வோம்," என்று ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸியை நேற்று முன்தினம் சந்தித்த பிறகு அவர் கூறினார்.

"பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் பணிகளை முடித்துவிடலாம். பணிகள் குறித்து எனக்கு அடிக்கடி தகவல்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன."

"பணிகளுக்கான கால அட்டவணையைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்."

"இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை மதித்து அதன்படி நடந்துகொள்வதில் கடப்பாடு கொண்டுள்ளோம்," என்றார் அமைச்சர் லோக்.

இதற்கிடையே, விரைவு ரயில் பாதைக்கான கட்டமைப்பு 32.78 விழுக்காடு நிறைவடைந்திருப்பதாக திரு ஓன் ஹஃபிஸ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

சிங்கப்பூரின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் விரைவு ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் 45 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாக போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.