தீர்க்கமுடியாத பிரச்சினைகள் பலவற்றின் தொடர்பில் அமெரிக்காவும் சீனாவும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பது உள்ளிட்ட சிக்கல் நிறைந்த உலகச் சூழலில் ஆசிய நாடுகள் ஒன்றாகவும் வெளிப்புறப் பங்காளிகளுடன் இணைந்தும் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆசிய நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் போக்கையும் ஒத்துழைப்பையும் வலுவாக்க வேண்டும். அவ்வாறு செய்வது வட்டாரத்தை மேலும் வலுவாகவும் மீள்திறன்மிக்கதாகவும் உருவாக்கும். ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படும் வட்டார ஒன்றுகூடல்கள் உள்ளிட்ட இணைப்புகளையும் அது உருவாக்கும். சீனாவில் நேற்றுக் காலை உரையாற்றிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இவற்றைத் தெரிவித்தார்.
சீனாவின் தெற்குத் தீவான ஹைனானில் நடைபெற்ற 'ஆசியாவுக்கான போவோ கருத்தரங்கு' என்னும் வருடாந்திர நிகழ்வில் பங்கேற்று திரு லீ பேசினார்.
"ஒன்றுடன் ஒன்று சார்ந்திருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு ஒன்றுகூடலிலும் ஒவ்வொரு நாடும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
"இருப்பினும் ஒட்டுமொத்தமாக, வெவ்வேறு ஒன்றுகூடல்கள் மீள்திறனையும் ஆசிய நாடுகளிடையேயான ஒத்துழைப்புக்குரிய கூட்டிணைவுக் கட்டமைப்பையும் ஏற்படுத்தும்.
"அதேவேளை, இந்த வட்டார ஒன்றுகூடல்கள் ஆசிய நாடுகளிடையேயும் உலகின் இதர பகுதிகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும். இதன்மூலம் நமது வெளிவட்டாரப் பங்காளிகள் ஆசியாவின் அமைதியிலும் வளப்பத்திலும் பங்கெடுப்பார்கள்," என்று திரு லீ தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நாடுகளுடனான தொடர்புத் திறனுக்கு உதாரணமாக ஆசியானைச் சுட்டினார். வட்டார விரிவான பொருளியல் பங்காளித்துவம் என்னும் தாராள வர்த்தக உடன்பாடு உலகிலேயே ஆகப் பெரியதொரு உடன்பாடு. இது உருவாக ஆசியான் உதவியதாக திரு லீ கூறினார். இந்த பங்காளித்துவ உடன்பாட்டில் இடம்பெற்றுள்ள 15 உறுப்பு நாடுகளில் சீனாவும் உள்ளது.
கிழக்கு ஆசிய உச்சநிலைக் கூட்டம், ஆசியான் பிளஸ் திரீ மற்றும் ஆசியான் வட்டாரக் கருத்தரங்கு போன்ற நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளை ஒன்றிணைத்துள்ளதுடன் உற்பத்தி தொடர்பான கலந்துரையாடலுக்கும் ஈடுபாட்டுக்கும் சரிசம வாய்ப்புகளையும் வழங்கி உள்ளதாக பிரதமர் லீ தமது உரையில் குறிப்பிட்டார்.
இவை தவிர, எல்லைதாண்டிய பசிபிக் பங்காளித்துவத்துக்கான விரிவான, முற்போக்கான உடன்பாடு (சிபிடிபிபி), அமெரிக்கா தொடங்கி வைத்த இந்தோ-பசிபிக் பொருளியல் கட்டமைப்பு மற்றும் மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு (டெபா) ஆகிய வட்டார ஒன்றுகூடல்களும் உள்ளதாக அவர் சொன்னார்.
இவற்றில் சிபிடிபிபியிலும் டெபாவிலும் உறுப்பினர் ஆக சீனா விண்ணப்பித்திருந்தாலும் இப்போது வரை அது உறுப்பினர் ஆகவில்லை.
சீனாவுடனான தனது உறவுகளை வலுப்படுத்துமாறு வட்டார நாடுகளுக்கு அழைப்பு விடுத்த திரு லீ, இருதரப்பு நம்பிக்கையை வளர்க்கக்கூடிய நிலைத்தன்மை, விரிவான உறவு போன்றவை அடிப்படையாக இருப்பின் சீனாவுக்கும் அண்டைய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான பொருளியல் ஒத்துழைப்பு இன்னும் வலுவாக இருக்கும் என்றார்.
வட்டார அளவிலும் இருதரப்பிலும் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மின்னிலக்கப் பொருளியல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்க உலகளவிலான அரசாங்க, நிறுவனத் தலைவர்கள் இக்கருத்தரங்கில் ஒன்றுகூடினர்.
சீனப் பிரதமர் லீ சியாங்கின் அழைப்பின்பேரில் இக்கருத்தரங்கில் திரு லீ கலந்துகொண்டார். சீனாவுக்கு ஒருவார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அவரது பயணப் பட்டியலில் இந்நிகழ்வும் அடங்கும். இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு இதே போவோ கருத்தரங்கில் திரு லீ பங்கேற்றுப் பேசினார். அப்போது சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அதில் கலந்துகொண்டிருந்தார்.
மலேசியப் பிரதமருடன் சந்திப்பு
நேற்றைய கருத்தரங்கில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் கலந்துகொண்டார். திரு லீயும் திரு அன்வாரும் நேற்று இருதரப்பு சந்திப்பை நிகழ்த்தினர்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருதரப்பு அணுக்க உறவுகளின் தனித்துவத்தை இரு தலைவர்களும் மறுஉறுதிப்படுத்தினர். அத்துடன், திரு அன்வார் ஜனவரியில் மேற்கொண்ட அதிகாரத்துவ சிங்கப்பூர் வருகைக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் இருதரப்பு முன்னேற்றம் குறித்தும் இருவரும் கலந்து ஆலோசித்தனர்.

