கனடா வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற எட்டுப் பேர் மாண்டுபோயினர். அவர்களில் இருவர் குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இரு குடும்பத்தினர் என்று கூறப்பட்டது.
காணாமல் போன கேஸி ஓக்ஸ், 30, என்ற படகோட்டியைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படகோட்டி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பிபிசி செய்தி தெரிவித்தது.
இச்சம்பவம் நெஞ்சைப் பிளப்பதாக உள்ளது என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, இனிமேல் இவ்வாறு நடப்பதைத் தடுக்க ஆன அனைத்தையும் செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் சொன்னார்.