தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அதிவேக இணையச் சேவையை வழங்க மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார்.
இப்போது சேவை வழங்கும் வட்டார இணையச் சேவை கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களைப் பயன்படுத்தி கம்பிவடம் வழியாக அந்தச் சேவையை வழங்குவது நோக்கம். இதற்காக ரூ.100 கோடி (சுமார் $16 மில்லியன்) ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் தகவல்துறை அமைச்சின் தகவல் தொழில்நுட்பம், மின்னிலக்கத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பில் இடம்பெற்ற விவாதிப்பில் பேசிய அமைச்சர், மொத்தம் 13 அறிவிப்புகளை விடுத்தார்.
அந்தத் திட்டங்களில் ஒன்றாக, மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்குக் குறைந்த கட்டணத்தில், நம்பகமாக அதிவேக இணைய சேவைகள் வழங்கப்படும் என்று கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 20,000 அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு ரூ.184 கோடி செலவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு ஒன்றை உருவாக்குவது; கணினி உயிரோவியம், கணினிக் காட்சி வியூகம், கணினி விளையாட்டுக் கொள்கையை வெளியிடுவது;
சோழிங்கநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த பசுமைப் பூங்காவை ரூ.20 கோடி செலவில் அமைக்கப்பது உள்ளிட்ட பலவும் அமைச்சர் அறிவித்தவற்றில் உள்ளடங்கும்.
சென்னை, ஓசூர், கோவை யில் உலகத் தரத்தில் எல்லா வசதிகளுடன் கூடிய உயர்தொழில்நுட்ப நகர்கள் அமைய உள்ளன. இணையச்சேவை, மக்கள் சேவை மையங்களில் ரூ.1.20 கோடியில் கூடுதலாக 100 புதிய சேவைகள் வழங்கப்படும்.
தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான சீர்மிகு மையம் 10 கோடி ரூபாயில் நிறுவப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
"தமிழக அரசு அமலாக்க விரும்பும் தகவல்தொழில்நுட்ப, மின்னிலக்கத் திட்டங்கள் மாநிலத்தில் மக்களிடையே மின்னிலக்கச் சேவைகளைப் பெறக்கூடியவர்களின் எண்ணிக்கையைக் கணிசமான அளவுக்கு அதிகமாக்கும்.
"மின்னிலக்கப் புரட்சியை ஏற்படுத்தும். அரசாங்கச் சேவை களை மக்களின் வீடுகளுக்குக் கொண்டு செல்வதற்கான கிரியாஊக்கியாக புதிய திட்டங்கள் செயல்படும்," என்று அமைச்சர் விவரித்தார்.
தமிழ் நாட்டில் செயல்படும் 37,656 அரசு பள்ளிக்கூடங்களில் 9,292 பள்ளிகளில் மட்டும் அதாவது 25% பள்ளிக்கூடங்களில் மட்டுமே இணைய வசதி இப்போது இருக்கிறது.
இது இந்திய அளவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் குறைவு. ஆகையால் பள்ளிக்கூடங்களில் இணையக் கட்டமைப்பு வசதியைக் கணிசமான அளவுக்கு மேம்படுத்தவும் திட்டங்கள் இருப்பதாக மாநில தகவல்துறை அமைச்சர் அமைச்சர் தெரிவித்தார்.