ஆசியானுடன் சேர்ந்து செயல்பட்டு தென்சீனக் கடலில் நடத்தை நியதியை உருவாக்குவதற்கான பேச்சை வேகப்படுத்த சீனா ஆயத்தமாக இருக்கிறது.
சீனாவின் பிரதமர் லி சியாங் இவ்வாறு தெரிவித்து இருப்பதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தென்சீனக் கடல் பகுதியில் அமைதியையும் நிலைப்பாட்டையும் கூட்டாக நிலைநாட்டும் வகையில் ஒத்துழைக்க சீனா தயார் என்று சீனாவுக்கு வருகை அளித்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமிடம் சனிக்கிழமை சீனப் பிரதமர் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டது.
"ஆசியா நமது பொது இல்லம். எல்லாருக்கும் வெற்றியைக் கொணரும் ஒத்துழைப்புதான் சரியான வாய்ப்பு," என்று திரு லி கூறியதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
தென்சீனக் கடல் பகுதியில் நடத்தை நியதியை உருவாக்க சீனாவும் ஆசியானும் கடந்த 20 ஆண்டுகாலமாக பாடுபட்டு வருகின்றன.
தென்சீனக் கடல் பகுதியில் 80%க்கும் மேற்பட்ட பகுதியில் 1947ஆம் ஆண்டின் வரைபடம் ஒன்றின் அடிப்படையில் தனக்கு உரிமை இருப்பதாக சீனா உறுதியாகக் கூறி வருகிறது.
தென்சீனக் கடல் பகுதி தொடர்பில் சீனாவுக்கும் பிலிப்பீன்ஸ், மலேசியா, இந்தோனீசியா, புருணை, வியட்னாம் நாடுகளுக்கும் தைவானுக்கும் இடையில் பதற்றம் அதிகமாகி வருகிறது.
தென்சீனக் கடலில், பிரச்சினைக்கு உரிய பகுதிகளில் கட்டுமானங்களை அமைத்து ராணுவ ரீதியில் அவற்றை சீனா பலப்படுத்தி வருகிறது. துறை முகங்கள், ஓடுபாதைகள், இதர உள்கட்டமைப்பு வசதிகளை சீனா உருவாக்கி வருகிறது.
பிலிப்பீன்சில் தனது ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா அண்மையில் விரிவுபடுத்தியது. அதைச் சீனா கடுமையாக குறைகூறியது.
இதனிடையே, மலேசிய பிரதமர் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் விளைவாக மலேசியாவுக்கு சீன முதலீடுகள் அதிகரிக்கும் என்று அந்த நாட்டில் உள்ள தொழில்துறை குழுமங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
அன்வாரின் சீனப் பயணத்தின் போது 19 உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன. அவை பசுமை தொழில்நுட்பம், மின்னிலக்கப் பொருளியல், நவீன வேளாண்மை ஆகிய துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும்.