முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட ஈராண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக நேற்று குஜராத்தின் சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதற்காக அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இம்மாதம் 13ஆம் தேதிவரை பிணை வழங்கியது.
மனு மீதான விசாரணையும் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறும் என்று கூறிய சூரத் நீதிமன்றம், பிரதிவாதியான புர்னேஷ் மோடி வரும் 10ஆம் தேதிக்குள் இதுதொடரபான தமது பதிலை அளிக்க உத்தரவிட்டது.
மேலும், 13ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூடுதல் அமர்வு நீதிபதி ஆர்பி மெகேரா தெரிவித்தார்.
மேல்முறையீட்டு மனு மீதான விசாரண நடைபெற்று முடியும் வரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட ஈராண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவும் அது உத்தரவிட்டது.
மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய புதுடெல்லியில்இருந்து புறப்படும் முன்னர் ராகுல் காந்தியை அவரது தாயார் சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும் தமது சகோதரியுமான பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் இண்டிகோ விமானம் மூலம் சூரத் நகர் சென்றார் ராகுல் காந்தி.
மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "உண்மையே எனது ஆயுதம். அதுவே ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான ஆதரவும் ஆகும்," என்றார்.

