பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரசித்திபெற்ற துணிச் சந்தைகளைக் கொண்ட பங்காபசார் வணிக வளாகத்தில் அந்நாட்டின் நேரப்படி நேற்று அதிகாலை தீ மூண்டது.
கண் சிமிட்டும் நேரத்தில் வளாகம் எங்கும் தீ பரவியதில் நோன்புப் பெருநாள் விற்பனைக்காக அங்குள்ள கிட்டத்தட்ட 3,000 கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்து துணிகள் சாம்பலாயின.
இதனால் அங்குள்ள கடைக்காரர்களுக்குப் பெருத்த நட்டம் ஏற்பட்டுள்ளது. ஒன்றும் செய்ய முடியாமல் பலர் கதறி அழுதனர்.
கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் மிகக் கடுமையாகப் போராடினர்.
கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் கழித்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று இரவு 10 மணி நிலவரப்படி மரணமடைந்தோர், காயமடைந்தோர் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை.
அதிகாலை நேரத்தில் தீ மூண்டதால் அப்போது அங்கு யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, தீயணைப்புப் பணிகள் உடனடியாக நடத்தப்படவில்லை என்று கடைக்காரர்கள், பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டதாகவும் தீயணைப்புப் படையின் தலைமையகத்தைக் கும்பல் ஒன்று தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் குறைந்தது நான்கு தீயணைப்புப் படை அதிகாரிகள் காயமடைந்தனர்.
அவர்களில் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

