ரச்சனா வேலாயுதம்
கடந்த ஆண்டு சிங்கப்பூர் காற்பந்து லீக் 'ஒன்' போட்டியை வென்ற சிங்கப்பூர் கல்சா சங்க குழுவைச் சேர்ந்த 25 வயதான கார்த்திக் ராஜ் மணிமாறன் நேற்று முன்தினம் காலமானார்.
நட்புமுறை ஆட்டத்திற்காக தனது காற்பந்துக் குழுவுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்ற கார்த்திக் ராஜுக்கு, இம்மாதம் 1ஆம் தேதியன்று வலிப்பு நோய் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மறுநாள் மருத்துவ விமானம் மூலம் கார்த்திக் ராஜ் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டார்.
சிங்கப்பூர் பொது மருத்துவ
மனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு காலமானார்.
இந்தத் தகவலை சிங்கப்பூர் கல்சா சங்கம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
கார்த்திக் ராஜின் திடீர் மரணம் அவரது குழுவை மீளாத் துயரில், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக சிங்கப்பூர் கல்சா சங்கம் தனது பதிவில் தெரிவித்தது.
கார்த்திக் ராஜ் சென்ற ஆண்டின் கல்சா அணியின் சிறந்த இளம் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதையும் சங்கம் மிகுந்த சோகத்துடன் நினைவுகூர்ந்தது.
2015ஆம் ஆண்டில் கார்த்திக் ராஜ் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய காற்பந்துக் குழுவுக்காகவும் 2016ஆம் ஆண்டில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய காற்பந்துக் குழுவுக்காகவும் விளையாடினார்.
கார்த்திக் ராஜ் சென்ற ஆண்டு கல்சா அணியில் சேர்ந்தார். இந்த அணியில் சிங்கப்பூர் காற்பந்து லீக் 'ஒன்' போட்டியில் ஐந்து கோல்களைப் போட்டார். 2020ல் பாலஸ்டியர் கல்சாவில் இருந்தபோது சிங்கப்பூர் பிரிமியர் லீக் ஆட்டங்களில் எட்டு முறை களமிறங்கினார்.
சகோதரரை இழந்து ஆழ்ந்த சோகத்தில் இருக்கும் கார்த்திக் ராஜின் சகோதரிகள் அவருடன் தங்களுக்கு இடையிலான நெருங்கிய உறவைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
"அதிகாலையில் மருத்துவ விமானத்தில் கார்த்திக் சிங்கப்பூருக்கு வந்தபோது அவரின் நண்பர்கள் பலர் திரண்டனர். அவர் பலராலும் நேசிக்கப்பட்டவர். இரண்டாவது பிள்ளையான கார்த்திக் குடும்பத்தை தமது உயிருக்கு நிகராக கருதினார்," என்று சகோதரிகள் இருவரும் கண்ணீர் மல்கக் கூறினர்.
இன்று இரவு 7 மணிக்கு புளாக் 130, மார்சிலிங் ரைஸ், #05-344 எனும் முகவரியில் கார்த்திக் ராஜின் இறுதிச் சடங்கு நடைபெறும். இரவு 8 மணிக்கு மண்டாய் தகனச் சாலைக்கு அவரது நல்லுடல் எடுத்துச்செல்லப்பட்டு ஹால் நான்கில் எரியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.