நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கொள்முதல் ஒப்பந்தத்தின்படி வரும் 2024 டிசம்பர் முதல் 400 புதிய மின்சாரப் பேருந்துகள் சிங்கப்பூர் சாலைகளில் ஓடும்.
மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளி மார்ச் 27 அன்று கோரப்பட்டது. அதனுடன் நான்கு எதிர்கால பேருந்து நிலையங்கள், கட்டப்படவுள்ள இரு ஒருங்கிணைந்த போக்குவரத்து மையங்களில் மின்னூட்ட நிலையங்களை அமைப்பதற்கான தனி ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டது.
செங்காங் வெஸ்ட், காலி பாத்து, ஈஸ்ட் கோஸ்ட், கிம் சுவான் ஆகிய இடங்களில் அமையவுள்ள பேருந்து நிலையங்களில் முதல் இரண்டின் கட்டுமானப் பணிகள் 2024ல் நிறைவடையும் என்றும் மின்சாரப் பேருந்துகளின் முதல் தொகுதி பேருந்துகளைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற இரு நிலையங்கள் முறையே 2025, 2026ஆம் ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்சாரப் பேருந்துகளுக்கான மின்னூட்ட நிலையங்களைப் பெறும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையங்கள் ஒன்று பொங்கோல் கோஸ்ட் பகுதியில் அமைகிறது. 2024ல் இங்கு புதிய எம்ஆர்டி நிலையம் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாசிர் ரிஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028ல் தயாராகவிடும் என்று கருதப்படுகிறது.
பூலிம், சிலேத்தார், லோயாங் ஆகிய பேருந்து நிலையங்களில் தற்போது 32 செருகும் மின்னூட்ட நிலையங்களும், புக்கிட் பாஞ்சாங், பிடோக்கில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையங்களில் மேலிருந்து பேருந்து களுக்கு மின்னூட்டம் செய்யும் நான்கு வசதிகளும் உள்ளன.
2018ல் வாங்கப்பட்ட 60 மின்சாரப் பேருந்துகளுக்காக அமைக்கப்பட்ட இவை, முன்னோடித் திட்டத்தின்கீழ் 2020 முதல் சேவையாற்றி வருகின்றன.
17 ஆண்டுகால சட்டபூர்வ செயல்பாட்டுக் காலம் முடிவடைய உள்ள டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக வாங்கப்பட உள்ள 400 புதிய மின்சார வாகனங்கள் அமையும்.
ஒப்பந்தப்பள்ளி ஆவணங்களின்படி, புதிய மின்சாரப் பேருந்துகள் ஓரடுக்குடன், மூன்று கதவுகள், இரு சக்கர நாற்காலி நிறுத்துமிடங்களுடன் தாழ்தள உட்புற வடிவமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும். பேருந்துகளின் இயக்க வரம்பு குறைந்தது 280 கி.மீ. இருக்க வேண்டும். ஆவணங்களின்படி, முதல் தொகுதி புதிய பேருந்துகள் 2024 அக்டோபரிலும் கடைசித் தொகுதி 2025 அக்டோபரிலும் வழங்கப்படும்.

