விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு, வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்துக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் விஜய் மக்கள் இயக்கம் வருங்காலத்தில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதி விஜய்யின் அனுமதி பெற்றவுடன் விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், கிளை மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாய அணி, மகளிர் அணி, இளையரணி ஆகிய நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், தம் ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும் நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.
அவர்களை நேரில் அழைத்து பாராட்டிய விஜய், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக விஜய் மாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கடந்த தேர்தலில் அவர் அரசியல் கட்சி தொடங்கவில்லை.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், மீண்டும் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் வாய்ப்பு நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன.

