மலேசியக் காவல்துறை அதிகாரிகள் இந்த ஆண்டிற்குள் உடலில் அணியக்கூடிய கேமராக்களைப் பயன்படுத்தத் தொடங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நாட்டு உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுஷன் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.
காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வண்ணம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, உரிய நிதி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
"எதிர்பாராத் தடைகள் ஏதும் இல்லாவிட்டால், இந்த ஆண்டே அத்தகைய கண்காணிப்புக் கேமராக்கள் வழங்கப்படும்.
"காவல்துறை, சுற்றுக்காவல் பிரிவு, போக்குவரத்துக் காவல்துறை, சிறப்புக் காவல்படை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு அவை வழங்கப்படும்," என்றார் அவர்.
பலவீனங்களை வெற்றிகொண்டு காவல்துறையின் நேர்மையான செயல்பாட்டை மேம்படுத்துவது என்பது ஒரு தொடர் முயற்சி என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், அரசாங்கம் காவல்துறைக்கான இந்தக் கேமராக்களுக்காக 30 மில்லியன் ரிங்கிட் (ஏறக்குறைய $9.04 மில்லியன்) ஒதுக்கப்படும் என்று அமைச்சர் சைஃபுதின் அறிவித்திருந்தார்.
2021ஆம் ஆண்டிலேயே அப்போதைய மலேசிய அரசாங்கம் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்திருந்தது.
"உடலில் அணியக்கூடிய வகையில் மொத்தம் 7,648 கேமராக்கள் வாங்கப்படும்.
இத்தகைய ஒரு கேமராவின் விலை 2,000 ரிங்கிட் முதல் 2,500 ரிங்கிட் வரை இருக்கும்," என்றார் அமைச்சர். இது $600 முதல் $759க்குச் சமம்.
அதிகாரிகளுக்கு இத்தகைய கேமராக்கள் வழங்கப்படுவதன் மூலம் பொதுமக்களுக்கு அமலாக்கப் பிரிவினர்மேல் உள்ள நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்று அமைச்சர் சைஃபுதின் கூறினார். குறிப்பிட்ட சம்பவங்களில் ஆதாரங்களைச் சேகரிக்கவும் இது உதவும் என்றார் அவர்.
"காவல்துறையை யாரும் கண்காணிக்கத் தேவையில்லை என்று நாங்கள் ஒருபோதும் கூறுவதில்லை. காவல்துறையினர் இந்த நடைமுறையை வரவேற்றுள்ளனர்," என்று அமைச்சர் சொன்னார்.
காவல்துறை அதிகாரிகளின் தவறான நடத்தையைக் காட்டும் காணொளிப் பதிவுகளை அழிக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து மலேசிய அதிகாரிகள் உடலில் அணியக்கூடிய கேமராக்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

