அமெரிக்காவின் கெண்டக்கி மாநிலத்தில் உள்ள லூயிஸ்வில் நகரில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐவர் மாண்டனர். மேலும் எட்டுப் பேர் காயம் அடைந்தனர்.
'ஓல்ட் நேஷனல் பேங்க்' எனும் வங்கியின் ஊழியரான 25 வயது கானர் ஸ்டர்ஜன் வேலையிடத்தில் நடத்திய தாக்குதலை இன்ஸ்டகிராமில் நேரலையில் ஒளிபரப்பியதாகக் காவல்துறை கூறியது.
காவல்துறையினருடனான துப்பாக்கிச் சண்டையில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
முன்னதாக, அவ்வங்கியில் வேலைசெய்யும் நால்வர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் மேலும் ஒருவர் மாண்டதாகக் கூறப்பட்டது.
உயிரிழந்த ஐவரும் 40 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
அவர்களில் 26 வயது காவல்துறை அதிகாரியும் ஒருவர்.
ஏறக்குறைய 10 நாள்களுக்கு முன்னர் பயிற்சியை முடித்துப் பணியில் சேர்ந்த அவருக்குத் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.
மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
துப்பாக்கிக்காரரின் நேரலைப் பதிவை அகற்றிவிட்டதாக இன்ஸ்டகிராம் கூறியது.
சம்பவம் குறித்து அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி உரிமம் குறித்த செயலின்மையால் கூடுதலான அமெரிக்கர்கள் உயிரிழப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் 21 வயது நிரம்பியோர் உரிமம் இன்றி துப்பாக்கி வாங்கவும் வைத்திருக்கவும் அனுமதிக்கும் 26 மாநிலங்களில் கெண்டக்கியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

