இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா நகரில், ராணுவ முகாமில் நேற்று துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது.
இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் முகாமில் உள்ள பீரங்கிப் படைப் பிரிவில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் நான்கு ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இத்தகவலை இந்திய ராணுவத்தின் தென்மேற்கு தளபத்தியம் உறுதி செய்தது.
சம்பவ இடத்துக்கு இந்திய ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் விரைந்தனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைச் சுற்றி தடுப்பு போட்டனர். முகாமின் நுழைவாயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இத்தாக்குதல் பயங்கரவாதச் செயல் அல்ல என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு நிலவரப்படி மாண்டவர்களின் அடையாளத்தை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. ராணுவ அதிகாரி ஒருவர் சக வீரர்களை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
கிட்டத்தட்ட மூன்று நாள்களுக்கு முன்பு முகாமில் இருந்த ஒரு துப்பாக்கியும் 28 தோட்டாக்களும் மாயமாயின என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல்போன அந்தத் துப்பாக்கியைத் தேடும் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது ராணுவச் சீருடையில் இல்லாது, சாதாரண உடையை அணிந்து முகாமுக்கு வந்த ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் பயன்படுத்திய துப்பாக்கிக்கும் முகாமிலிருந்து மாயமான துப்பாக்கிக்கும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, தாக்குதல் நடத்திய ஆடவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

