இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி மேலும் 7,830 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவே கடந்த ஏழு மாதங்களில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள ஆக மோசமான கொவிட்-19 பாதிப்பு.
கொவிட்-19 கிருமி மளமள எனப் பரவுவதால் சில மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் போன்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்குச் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 5,676ஆகக் குறைந்து இருந்த நிலையில், நேற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தமிழக மக்களைக் கவலை அடையச் செய்துள்ளது.
மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்றின் தாண்டவத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுமா என்ற அச்சம் பலரின் மனங்களில் எட்டிப் பார்க்கிறது.
2020ஆம் ஆண்டில் தலைதூக்கிய கொவிட்-19 கிருமித்தொற்று இதுவரை உலகெங்கும் பல மில்லியன் உயிர்களைப் பறித்துவிட்டது. அண்மையில் அதன் வீரியம் சற்று தணிந்து மக்களின் அன்றாட வாழ்க்கை வழக்கத்துக்குத் திரும்பியது. இந்நிலையில், மீண்டும் கிருமிப் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40,215ஆக உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,776,002 ஆக அதிகரித்துள்ளது.

