பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டு புகார் அளிக்க வருவோருக்கு இந்த மாதத்திலிருந்து சிங்கப்பூரில் உள்ள 34 அக்கம்பக்கக் காவல் நிலையங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் குற்றம் தொடர்பாகப் புகாரளிக்க வந்திருப்பதாக காவல் நிலைய வரிசை எண் வழங்கும் இயந்திரங்களில் குறிப்பிடும் வசதி செய்து தரப்படும்.
நடந்தது என்ன என்று விசாரித்து அறிய தனிமை நிறைந்த இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும்.
பாலியல் குற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கு, அனைத்துலகப் பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு மாதத்தையொட்டி கேன்டோன்மண்ட் காவல்துறை வளாகத்தில் நேற்று நடத்தப்பட்டது.
வரிசை எண் வழங்கும் இயந்திரங்களில் 'பாலியல் குற்றப் புகார்' என்னும் தெரிவை காவல்துறை படிப்படியாக ஏற்படுத்தும் என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.
"அந்தத் தெரிவில் புகார் பதிவாகி இருப்பதை காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அந்த இயந்திரம் உடனடியாகத் தெரிவிக்கும். அதன் பிறகு, புகார் அளிக்க வந்திருப்பவருக்கு வரிசை எண்ணில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, ரகசிய இடம் ஒதுக்கப்படும்.
"பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவோரை ஆதரிப்பதற்கான முயற்சிகள் இந்த ஆண்டில் அதிகமாக மேற்கொள்ளப்படும். பாலியல் குற்றம் தொடர்பாகப் புகார் அளிப்பதில் உள்ள சிரமங்களைக் குறைக்க ஏற்பாடு செய்யப்படும்," என்றார் திரு சண்முகம்.
காவல்துறை நேற்று அறிவித்த பல்வேறு புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதி இது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை ஐந்து ஆண்டு காணாத உச்சத்தைத் தொட்டது.
பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், மானபங்கம், எளிதில் பாதிப்புக்கு ஆளாவோரையும் குழந்தைகளையும் ஈடுபடுத்தி பாலியல் குற்றம் புரிதல் போன்றவை உள்ளிட்ட 2,549 பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அந்த ஆண்டில் பதிவானதாக காவல்துறை தெரிவித்தது.
இதற்கு முன்னர், அத்தகைய புகார்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 2,459ஆகவும் 2021ஆம் ஆண்டு 2,212 ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டின் எண்ணிக்கை இவற்றை எல்லாம் தாண்டிவிட்டது.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவலுக்கு முன்னர் பதிவான எண்ணிக்கையையும்கூட அது கடந்துவிட்டது. 2018ஆம் ஆண்டு 2,414 பாலியல் குற்றப் புகார்கள் பதிவான நிலையில் அதற்கடுத்த 2019ஆம் ஆண்டு 2,409 என அந்தப் புகார்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது.
சிங்கப்பூர் காவல்துறை இம்மாதம் 3ஆம் தேதி பாலியல் குற்றம் மற்றும் குடும்ப வன்முறையைக் கையாளும் தனிப்பிரிவை அமைத்தது. குற்றப் புலனாய்வுத் துறையின்கீழ் அமைக்கப்பட்ட அந்தப் பிரிவில் பாலியல் குற்றங்களைக் கையாள பயிற்சிபெற்ற அதிகாரிகள் இடம்பெற்றனர்.

