ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உரையாற்ற இருந்த இடத்தில் நேற்று புகைக்குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அச்சம்பவத்தின் தொடர்பில் ஆடவர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.
தென்மேற்கு ஒசாகா நகரில்இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரமுள்ள வக்காயாமா என்னும் பகுதியில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திற்கு திரு கிஷிடா நேற்று வருகை புரிந்தார். அப்போது இளையர் ஒருவர் 'பைப்' போன்ற ஒரு பொருளை வீசிவிட்டு தப்ப முயன்றார். ஆனால், துறைமுக ஊழியர் ஒருவர் அவரைப் பிடிக்க முயன்றதாகவும் கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்பட்ட காவல்துறையினர் அந்த இளையரை மடக்கிப் பிடித்ததாகவும் அசாஹி என்னும் உள்ளூர் நாளிதழ் தெரிவித்தது.
அவர் பிடிபட்ட சற்று நேரத்தில், திரு கிஷிடா நின்றிருந்த இடத்தின் அருகே குண்டு வெடிப்பதைப் போன்ற சத்தமும் அதனைத் தொடர்ந்து புகையும் எழுந்தது. காவலர்கள் விரைந்து சென்று அவரைப் பத்திரமாக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று காவல்துறையை மேற்கோள் காட்டி என்எச்கே அரசாங்க ஊடகம் கூறியது.
இளையரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவரின் செயலுக்கு என்ன காரணம் என்று அதன் பின்னரே தெரிய வரும் என்றும் அமைச்சரவைத் தலைமைச் செயலாளர் ஹிரோகசு மட்சுனோ தெரிவித்தார். ஜப்பானியப் பிரதமராக நீண்டகாலம் இருந்து ஓய்வுபெற்ற திரு ஷின்ஸோ அபே, கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைவதற்குள் இந்த அசம்பாவிதம் அரங்கேறி உள்ளது.

