இந்தியாவின் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிக் அகமது.
கொலை வழக்குகள் தொடர்பில் கடுங்காவல் தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட ஆதிக் அகமதும் அவரது சகோதரரும் அகமதாபாத் சிறையில் தண்டனையை நிறைவேற்றிவந்தனர்.
மருத்துவப் பரிசோதனைக்காக உத்தரப் பிரதேச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில், காவல்துறையினர் முன்னிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
செய்தியாளர்கள் என்று கூறி அங்கு வந்த சிலர் ஆதிக் அமகதையும் அவரது சகோதரரையும் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அரசியலுக்கு வருமுன்பு குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆதிக் மீது 2005ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராஜ் பால் கொலை செய்யப்பட்டது, இந்த ஆண்டு பிப்ரவரியில் ராஜ் பாலின் வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை செய்யப்பட்டது இரண்டின் தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் ஆதிக் அகமதின் மகன் ஆசாத், அவரது நண்பர் குலாம் இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
தலைமறைவான அவ்விருவர் குறித்தும் தகவல் அளிப்போருக்கு சன்மானம் அறிவிக்கப்பட்ட நிலையில், இம்மாதம் 13ஆம் தேதி ஜான்சி நகரில் ஆசாத்தும் குலாமும் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்ட ஆதிக்கையும் அவரது சகோதரரையும் சுட்டுக் கொன்றபின் தப்பியோடிய மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆதிக் அகமது கொலைச் சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கொண்ட உயர்நிலைக் குழுவின் விசாரணைக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். குழு அதன் அறிக்கையை இரு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு கட்டிக்காக்கப்படுவதை உறுதிசெய்யும்படி காவல்துறையிடம் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்கள்போல் வேடமிட்டவர்கள், காவல்துறையினரின் முன்னிலையில் ஆதிக் அகமதை சுட்டுக் கொன்றதை அடுத்து செய்தியாளர் பாதுகாப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சு முடிவெடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.