தேசிய பல்கலைக்கழக சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பின் பொது மருத்துவமனைகளில் புதிய வசதிகள்
தேசிய பல்கலைக்கழக சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பின்கீழ் (என்யுஎச்எஸ்) உள்ள மருத்துவமனைகளில் மின்வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் புதிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
மூன்று பொது மருத்துவமனைகளில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான 22 மின்னூட்ட முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு மருத்துவமனைகளில் எரிபொருளில் இயங்கும் பழைய அவசர மருத்துவ வாகனங்களுக்கும் வேன்களுக்கும் பதிலாக புதிய மின்வாகனங்கள் சேவை வழங்குகின்றன.
வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் முகப்புகளை 'எஸ்பி' குழுமத்திடம் இருந்து என்யுஎச்எஸ் பெற்றுக்கொண்டது. புதிய திட்டத்தின்கீழ், தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, அலெக்ஸாண்டிரா மருத்துவமனை ஆகியவற்றில் மின்னூட்ட முகப்புகள் நிறுவப்படும். இவற்றில் முதல் 12 முகப்புகள் ஏற்கெனவே நிறுவப்பட்டுவிட்டதாகவும் எஞ்சியவை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனைகள் அதிகமானோர் வந்துசெல்லும் இடம் என்பதால் வாகன மின்னூட்ட வசதிகளை அமைத்துத் தர முடிவெடுத்ததாக என்யுஎச்எஸ் கூறியது.
ஊழியர்களும் இதனால் கரியமில வாயுவை வெளியேற்றாத மின்வாகனங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.
2028ஆம் ஆண்டுக்குள் மேலும் எட்டு மின்னூட்ட முகப்புகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இங் டெங் ஃபோங் மருத்துவமனை மின்சாரத்தில் இயங்கும் மூன்று அவசர மருத்துவ வாகனங்களையும் ஒரு வேனையும் இந்த ஆண்டு வாங்க இருக்கிறது. இதற்கு $500,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
நீண்டகால அடிப்படையில் செயலாக்கச் செலவுகளைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று கருதப்படுகிறது.
அண்மையில் டீசலில் இயங்கும் வாகனங்கள் சிலவற்றுக்குப் பதிலாக மின்வாகனங்களை அது சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, அலெக்ஸாண்டிரா மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மூன்றிலும் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்படவுள்ளன.
மூன்று மருத்துவமனைகளிலும் உள்ள சூரிய சக்தித் தகடுகள் சராசரியாக ஆண்டுக்கு 860,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
என்யுஎச்எஸ் கட்டமைப்பின் பசுமை இலக்குகளுக்குக் கைகொடுக்கும் விதமாக அதனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாக 'எஸ்பி' குழுமம் தெரிவித்தது.

