வடகொரிய சுற்றுக்காவல் படகு ஒன்று கடல் எல்லையத் தாண்டி தங்கள் பக்கம் வந்ததால் அதை எச்சரிக்கும் விதத்தில் துப்பாக்கி முழக்கம் செய்யப்பட்டதாகத் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
உடனடியாக வெளியேறும்படி எச்சரிக்கைக் குறிப்புகள் ஒலிபரப்பப்பட்டதாகவும் அது கூறியது.
நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி முற்பகல் 11 மணியளவில் வடகொரிய சுற்றுக்காவல் படகு எல்லை தாண்டி நுழைந்ததாகக் கூறப்பட்டது.
வடகொரிய சுற்றுக்காவல் படகுகள் இத்தகைய சினமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதற்காகத் தனது ராணுவம் தயார்நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தென்கொரியா கூறியது.
இந்த நடவடிக்கையின்போது தெளிவாகப் பார்க்க முடியாததால் அருகில் இருந்த சீன மீன்பிடிப் படகுடன் லேசாக மோத நேரிட்டது.
அதனால் தென்கொரியப் படகில் இருந்த சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய வாரங்களில் வடகொரியா அதன் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய புதிய ஏவுகணைகளை அது சோதித்தது.
இத்தகைய நடவடிக்கைகளால் பதற்றம் நிலவும் வேளையில் வடகொரிய சுற்றுக்காவல் படகு ஊடுருவிய சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
1950 முதல் 1953 வரை நடந்த கொரியப் போருக்குப் பிறகு வரையப்பட்ட கடல் எல்லை தவறு என்றும் அது மேலும் தெற்கில் அமையவேண்டும் என்றும் 1990ஆம் ஆண்டிலிருந்தே பியோங்யாங் கூறி வருகிறது.
சென்ற ஆண்டும் கடல் எல்லையை மீறி நுழைந்த விவகாரம் தொடர்பில் இரு கொரியாக்களும் எச்சரிக்கை குண்டு முழக்கம் செய்தன.
அமெரிக்கப் படைகளுடன் தென்கொரியா கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்காவிற்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி அணுவாயுதப் போருக்கான ஒத்திகை என்று பியோங்யாங் கருதுகிறது.
இருப்பினும் அமெரிக்க ஆகாயப் படை, கப்பற்படைகளுடன் இம்மாதம் 28ஆம் தேதி வரை கூட்டுப் பயிற்சி நடத்தப்படும் என்று சோல் கூறியுள்ளது.
அதில் இரு நாடுகளின் 110 போர் விமானங்களோடு 1,400 துருப்பினரும் பயிற்சியில் ஈடுபடுவர் என்று கூறப்பட்டது.
வாஷிங்டனும் சோலும் வலுச் சண்டைக்கு வருவதால் போர்த் தடுப்பு ஆற்றலை வலுப்படுத்தும்படி வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் வடகொரியாவின் போர் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி அந்த வட்டாரத்தில் தற்காப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதாக அமெரிக்காவும் தென்கொரியாவும் கூறுகின்றன.

