சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் கூறிஇருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
"தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால் மற்ற தாய்மொழி ஆசிரியர்களைவிட குறைவான எண்ணிக்கையிலேயே தமிழ்மொழி ஆசிரியர்கள் உள்ளனர்.
"தமிழ் மாணவர்கள் குறைவாகவே உள்ளபோதிலும் பள்ளிகளில் வெவ்வேறு வயதுகளில் வெவ்வேறு பாடத் தொகுப்புகளைக் கற்கும் தமிழ் மாணவர்களுக்கான கற்றல் தேவைகள் பலதரப்பட்டவையாகவே உள்ளன," என்று திரு விக்ரம் குறிப்பிட்டார்.
"தமிழாசிரியர்கள் பற்றாக்குறையால் சில பள்ளிகளில் வெவ்வேறு பாடத் தொகுப்புகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தமிழ்மொழி வகுப்புகளுக்கு ஒன்றிணைக்கப்படுகின்றனர். இது பொதுக் கற்றலைச் சிரமமாக்குகிறது," என்று திரு விக்ரம் கூறினார்.
"கல்வி அமைச்சு இந்தப் பிரச்சினையைக் கையாள ஏதேனும் திட்டங்கள் வைத்திருக்கிறதா என்பதை அறிவது பயன்மிக்கதாக இருக்கும்.
"அரசாங்கப் பள்ளிகளிலும் பாலர் பள்ளிகளிலும் தமிழ்மொழி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் முக்கியமானது," என்றார் திரு விக்ரம்.
1950களில் தமது தந்தை தொடக்கப்பள்ளி பயின்ற காலம், 1980களில் தாம் பாலர் பள்ளியில் பயின்ற காலகட்டம் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் தற்போது சிங்கப்பூரின் பாலர் பள்ளிகளிலும் அரசாங்கப் பள்ளிகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுவதை அவர் சுட்டினார். இருப்பினும், தமிழாசிரியர் பற்றாக்குறை சவாலாக விளங்குவதாக திரு விக்ரம் குறிப்பிட்டார்.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவும் உதவியும் செய்து வருவதற்குத் தாம் நன்றிக்கடன்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
வளர்தமிழ் இயக்கம் தமிழ்மொழி விழாவுக்கு வழங்கிவரும் ஆதரவை அவர் குறிப்பிட்டார்.
தாம் தலைமைப் பொறுப்பேற்று உள்ள தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழு, வகுப்பறைக்கு அப்பால் மாணவர்களுக்குத் தமிழ்மொழி மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதையும் திரு விக்ரம் சுட்டினார்.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அதன் பொதுச்சேவை ஒளிபரப்புத் திட்டத்தின்மூலம் தரமான நிகழ்ச்சிகளைப் படைப்பதற்கு மானியங்கள் வழங்குவதை அவர் எடுத்துரைத்தார்.
இத்தகைய ஆதரவு நடவடிக்கைகள், சிங்கப்பூரில் தமிழ்மொழி துடிப்புமிக்க மொழியாக விளங்குவதற்கு உதவுகின்றன என்று கூறிய திரு விக்ரம், அரசாங்கத்தின் ஆரவாரமில்லாத இத்தகைய ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததுடன் இந்த ஆதரவு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

