வெற்றி எனும் சொல்லுக்குப் புதிய பொருளை வரையறுப்பதும் திறன், சமூக ஆதரவு, முதியோர் பராமரிப்பு ஆகியவை தொடர்பில் புதிய அணுகுமுறைகளை வரையறுப்பதும் 'நான்' என்பதைவிட 'நாம்' என்பதற்குக் கூடுதல் முக்கியத்துவம் தருவதும் சிங்கப்பூரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முக்கியம்.
பொதுமக்களிடம் கடந்த பல மாதங்களாக நடத்தப்பட்ட முன்னேறும் சிங்கப்பூர் கருத்தறியும் நடவடிக்கையில் அது தெரியவந்ததாகத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறிஉள்ளார்.
அதிபர் உரை மீதான விவாதத்தின் முதல் நாளான நேற்று நாடாளுமன்றத்தில் அவர் உரைஆற்றினார்.
இந்த ஐந்து முக்கிய மாற்றங்களும் புதிய சமூக ஒருங்கிணைப்புக்கு முக்கியமான அம்சங்கள்.
சமூகத்தில் பெரும்பாலானோரும் அவர்களின் பிள்ளைகளும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மேம்பாடு காண்பதை அந்த அம்சங்கள் உறுதிசெய்யும். வசதி குறைந்தோர் எதிர்கொள்ளும் இடைவெளிகளை நீக்கவும் அவை உதவும் என்றார் திரு வோங்.
திறன்தகுதிக்கான வரையறையை விரிவுபடுத்துதல், மறுவேலைவாய்ப்புக்கான மேம்பட்ட ஆதரவு, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணங்களைக் குறைத்தல் போன்றவை நிச்சயமற்ற, அபாயகரமான உலகச் சூழலில் சிங்கப்பூரின் வருங்காலத்தை வடிவமைப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அடங்கும்.
திறன்களை இளம் வயதில் இருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் அரசாங்கம் தேசிய அளவில் 'கிட்ஸ்டார்ட்' திட்டத்தை மேலும் பல குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு விரிவுபடுத்தவிருக்கிறது என்றார் அவர்.
பள்ளிகள், மதிப்பெண்கள் குறித்த பெற்றோரின் மனப்போக்கில் மாற்றம் தேவை என்று அவர் வலியுறுத்தினார். அரசாங்கம் அதன் தரப்பில் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிவுகளில் மாற்றம் செய்ததை அவர் சுட்டினார்.
குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கும் மற்ற ஊழியர்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி அதிகரிக்காத வகையில் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும்.
வீடமைப்பு, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை அனைத்து சிங்கப்பூரர்களின் அடிப்படைத் தேவைகள் என்று குறிப்பிட்ட திரு வோங், அரசாங்கம் அவை தொடர்பான ஆதரவைத் தொடரும் என்று கூறினார்.
மறுவேலைவாய்ப்பு, மூத்தோர் பராமரிப்பு தொடர்பான ஆதரவு நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
அனைத்துத் தரப்பினரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறிய திரு வோங், மாற்றம் தேவை என்ற நிலை வரும்போது மாறிக்கொள்வதற்கான மனஉறுதி சிங்கப்பூரர்களுக்குத் தேவை என்றார்.
சவால்களை வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் வோங் வலியுறுத்தினார்.

