4 நாளுக்கு 'டோல்' இல்லை, அபராதம் குறைப்பு; மலேசியாவில் நோன்புப் பெருநாள் சலுகைகள்

4 நாளுக்கு 'டோல்' இல்லை, அபராதம் குறைப்பு; மலேசியாவில் நோன்புப் பெருநாள் சலுகைகள்

2 mins read

மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் நோன்­புப் பெரு­நாளை முன்­னிட்டு பல்­வேறு சலு­கை­களை அறி­வித்­துள்­ளார்.

இன்று, நாளை, நாளை மறு­நாள் (ஏப்­ரல் 19, 20, 21) மற்­றும் அடுத்த திங்­கட்­கி­ழமை (ஏப்­ரல் 24) என நான்கு நாள்­க­ளுக்கு மலே­சியா முழு­வ­தும் உள்ள நெடுஞ்­சா­லை­களில் எல்லா வாக­னங்­களும் சுங்­கக் கட்­ட­ணம் (டோல்) செலுத்­தா­மல் இல­வ­ச­மா­கச் செல்­ல­லாம்.

நோன்­புப் பெரு­நாளை ஒட்டி நேற்று திரு அன்­வார் சிறப்­புரை ஆற்­றி­னார்.

அப்­போது அவர், ரஹ்மா இல­வச டோல் திட்­டம், நோன்­புப் பெரு­நாள் கால­கட்­டத்­தில் மலே­சி­யர்­க­ளின் சுமை­யைக் குறைப்­ப­தற்­காக அமல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"நாடு முழு­வ­தும் உள்ள 33 நெடுஞ்­சா­லை­க­ளி­லும் செல்­லும் எல்­லா­வி­த­மான வாக­னங்­க­ளுக்­கும் இந்த நான்கு நாள் சலுகை பொருந்­தும்.

"பெரு­நாள் காலங்­களில் தங்­க­ளது சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்­பு­ப­வர்­க­ளின் செல­வைக் குறைக்க இது உத­வும்.

"மேலும், சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்­பு­வ­தற்­கான பய­ணத்­தைத் திட்­ட­மி­டு­வ­தற்­கும் இச்­ச­லுகை கைகொ­டுக்­கும்,'' என்­றார் அவர்.

மற்­றொரு சலு­கை­யாக, குறிப்­பிட்ட சில பேரங்­கா­டி­களில் ரஹ்மா திட்­டத்­தின்­கீழ் கோழி, வெங்­கா­யம் போன்ற உண­வுப்­பொ­ருள்­க­ளுக்கு சிறப்பு விலைக்­க­ழிவு வழங்­க­வும் திரு அன்­வார் இணங்­கி­யுள்­ளார்.

நோன்­புக் காலத்­தில் கிட்­டத்­தட்ட இரண்டு மில்­லி­யன் வாக­னங்­கள் தனது நெடுஞ்­சா­லைக் கட்­ட­மைப்­பைப் பயன்­ப­டுத்­தும் என்று ஆகப்­பெ­ரிய நெடுஞ்­சாலை நிர்­வ­கிப்­பா­ள­ரான 'பிளஸ் மலே­சியா' எதிர்­பார்க்­கிறது.

இந்த எண்­ணிக்கை வழக்­கத்­தை­விட 20 விழுக்­காடு அதி­கம்.

மேலும், நாளை மறு­தி­னம் (வெள்­ளிக்­கி­ழமை) தொடங்கி திங்­கட்­கி­ழமை வரை மலே­சி­யா­வில் நான்கு நாள்­க­ளுக்கு பொது­வி­டு­முறை அறி­விக்­கப்­ப­டு­வ­தா­க­வும் திரு அன்­வார் தமது சிறப்­பு­ரை­யில் குறிப்­பிட்­டார்.

வாக­ன­மோட்­டி­க­ளுக்கு மேலும் ஒரு சலு­கையை அவர் அறி­வித்­தார்.

2022ஆம் ஆண்­டும் அதற்கு முன்­ன­ரும் விதிக்­கப்­பட்ட போக்­கு­வ­ரத்து அப­ரா­தத் தொகை ஒவ்­வொன்­றும் 50 ரிங்­கிட்­டுக்­குக் குறைக்­கப்­படும் என்­பது அந்த அறி­விப்பு.

கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய விலை­யில் வீடு­க­ளைக் கட்­டித் தரும் மேம்­பாட்­டா­ளார்­க­ளுக்கு குறை­வான விலை­யில் சிமெண்ட் வழங்­கு­வது மற்­றொரு சலுகை.