வேலை இல்லாதோர் எண்ணிக்கை 67,100லிருந்து 61,500க்கு இறங்கியது
சிங்கப்பூரில் மொத்த வேலை வாய்ப்புகள் கொவிட்-19க்கு முந்தைய நிலையை விஞ்சி அதிகரித்து இருக்கின்றன.
அந்த அதிகரிப்பு 3.9% ஆக இருக்கிறது என்று முன் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆட்குறைப்பு எண்ணிக்கை சுமார் 4,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் 2,990 பேர் ஆட்குறைப்புக்கு ஆளானார்கள். மனிதவள அமைச்சு நேற்று 2023 முதல் காலாண்டுக்குரிய தொழிலாளர் சந்தை புள்ளிவிவரங்கள் பற்றிய முன்னோட்ட அறிக்கையை வெளியிட்டது.
அதில் இந்தக் கணிப்புகள் இடம்பெற்று இருக்கின்றன. ஆட்குறைப்புகள் அதிகரித்தாலும் மார்ச் மாதம் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைவாகவே இருந்ததாக அமைச்சு தெரிவித்தது.
சென்ற ஆண்டின் கடைசி காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வேலையின்மை விகிதம் குறைந்து இருக்கிறது.
சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளை உள்ளடக்கிய சிங்கப்பூர்வாசிகளுக்கான வேலையின்மை விகிதம் 2022 டிசம்பரில் 2.8% ஆக இருந்தது. அது இந்த ஆண்டு மார்ச்சில் 2.5%ஆகக் குறைந்துவிட்டது.
வேலையில்லாமல் இருந்த சிங்கப்பூரர்களின் விகிதம் அதே காலகட்டத்தில் 2.9%லிருந்து 2.7% ஆகக் குறைந்தது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரைப்பட்ட மூன்று மாதத்தில் வேலையின்றி இருந்த சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை 67,100லிருந்து 61,500 ஆகக் குறைந்து இருக்கிறது. அவர்களில் 54,900 பேர் குடிமக்கள்.
ஒட்டுமொத்த வேலையின்மை விகிதமும் குறைந்துள்ளது. மார்ச்சில் மொத்த ஊழியர் அணியில் 1.8% ஆக வேலையின்மை விகிதம் இருந்தது. இந்த அளவு டிசம்பரில் 2% என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தான் நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை அடுத்த மூன்று மாதங்களில் ஆட்சேர்ப்புகளை அதிகரிக்கப் போவதாகக் கூறியிருக்கின்றன என அமைச்சு தெரிவித்தது.
ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவும் நிறுவனங்கள் திட்டமிடுகின்றன. மார்ச் மாத நிலவரப்படி, ஆய்வில் கலந்துகொண்ட நிறுவனங்களில் 38.2% நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த திட்டமிடுவதாகத் தெரிவித்தன. இந்த விகிதம் டிசம்பரில் 25.3% ஆக இருந்தது.
முந்தைய காலாண்டுகளைப் போலவே சிங்கப்பூர்வாசிகளாக அல்லாதவர்களின் வேலை நியமனங்களே மொத்த வேலை வாய்ப்பு அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக இருந்தன.
இதனிடையே, இந்த நிலவரங்கள் பற்றி சமூக ஊடகத்தில் கருத்துக் கூறிய தொழிற்சங்க நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே, வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைவாகவே இருக்கும் என்பதையும் வேலைவாய்ப்பு நிலவரங்கள் ஆக்ககரமானதாக இருக்கும் என்பதையும் சுட்டினார்.
அதேநேரத்தில் உலகப் பொருளியலில் நிலவும் நிச்சயமில்லாத போக்குகளையும் குறிப்பிட்ட அவர், உற்பத்தித்துறையில் நெருக்கடிகள் தொடர்ந்து இருந்து வரும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மின்னணுத் தொழில்துறையில் அத்தகைய நெருக்கடி இருக்கலாம். அவற்றின் தாக்கங்கள் தொடர்புடைய இதர துறைகளிலும் தெரியவரலாம். இந்த ஆண்டின் பிற்பகுதியில் உற்பத்தித் தொழில்துறை கொஞ்சம் ஆக்ககரமாகத் திரும்பும் என்பதே நம்பிக்கை என்றாரவர்.