தனது நட்பு நாடான பிலிப்பீன்சைத் தற்காக்க அமெரிக்கா கொண்டுள்ள கடப்பாடு இரும்புக்கவசம் போன்றது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தென்சீனக் கடல் தொடர்பில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில், பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் அமெரிக்காவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.
கடந்த பத்தாண்டுகளில் பிலிப்பீன்ஸ் அதிபர் ஒருவர் அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வமாகச் சென்றிருப்பது இதுவே முதன்முறை. அங்கு அதிபர் பைடனை அவர் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்கா-பிலிப்பீன்ஸ் இடையிலான பாதுகாப்புக் கூட்டணியை இரு தலைவர்களும் மறு உறுதிப்படுத்தினர்.
தென்சீனக் கடற்பகுதியிலும் தைவானை ஒட்டியும் சீனா தனது நடவடிக்கைகளை அதிகரித்துவரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
வலுவான ராணுவ ஒத்துழைப்பிற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க இருநாட்டு அதிபர்களும் இணக்கம் தெரிவித்தனர்.
"தென்சீனக் கடல் விவகாரம் உட்பட, பிலிப்பீன்சைத் தற்காப்பதில் அமெரிக்கா இரும்புக்கவசம்போல் செயல்பட கடப்பாடு கொண்டுள்ளது," என்று திரு மார்க்கோசிடம் அதிபர் பைடன் தெரிவித்தார்.
அதாவது, பசிபிக் வட்டாரத்தில் பிலிப்பீன்ஸ் ராணுவப் படைகள், கப்பல்கள் அல்லது விமானங்கள்மீது ஏதேனும் ஆயுதத் தாக்குதல் தொடுக்கப்பட்டால் அதற்கு அமெரிக்கா உதவிக்கு வரும்.
இரு நாடுகளுக்கு இடையில் 1951ஆம் ஆண்டு கையெழுத்தான இருதரப்புத் தற்காப்பு உடன்பாடு அதற்கு வகைசெய்கிறது.
தைவான் நீரிணைப் பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் பேணிக்காப்பது முக்கியம் என்பதையும் அது அனைத்துலகப் பாதுகாப்பிற்கும் செழிப்பிற்கும் இன்றியமையாதது என்பதையும் இரு தலைவர்களும் உறுதிப்படுத்தியதாகக் கூட்டறிக்கை தெரிவித்தது.
நிலம், நீர், வான்வழி, இணையவெளி என எல்லா வகையிலும் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பிற்குப் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் கவனம் செலுத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அத்துடன், மூன்று சி-130 விமானங்களையும் கூடுதல் சுற்றுக்காவல் கப்பல்களையும் பிலிப்பீன்சுக்கு அமெரிக்கா வழங்கும் எனச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு உள்ளன.
அதன்படி, தூய எரிசக்தி, கனிமத்துறை, உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் தனது முதலீட்டை அதிகப்படுத்துவதற்காக அமெரிக்க அதிபரின் வணிக, முதலீட்டுக் குழு பிலிப்பீன்சிற்குப் பயணம் மேற்கொள்ளும்.
இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசியது இது இரண்டாம் முறை. முன்னதாக அவ்விருவரும் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின்போது சந்தித்துப் பேசினர்.

