சிங்கப்பூரில் இளையர்கள் போதைப் புழக்கத்துக்கு அடிமையாவது வருத்தமளிக்கும் போக்கு என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்து உள்ளார்.
"இளைய வயதிலும் பெற்றோர் கண்காணிப்பில் பாதுகாப்பான இடமாக விளங்கக்கூடிய வீட்டிலும் போதைப் புழக்கம் தொடங்குகிறது என்பதை அறியும்போது மிகவும் கவலையாக உள்ளது," என்றார் அவர்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) நேற்று நடத்திய செயல்திட்ட கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு டியோ, "நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய போதைப் பழக்கத்தைத் துடைத்தொழிக்க இன்னும் அதிகம் செய்ய வேண்டி உள்ளது," என்றார்.
இந்தக் கருத்தரங்கில், போதைப் பழக்கம் தொடர்பாக முதல்முறை நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. மனநலக் கழகம் 2021 ஏப்ரல் முதல் 2022 ஜூலை வரை கிட்டத்தட்ட 15 மாதங்கள் மேற்கொண்ட ஆய்வில் 6,509 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் கலந்துகொண்டனர். அவர்கள் 15 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் போதைப்பொருள் உட்கொள்ளக்கூடிய இடைநிலை வயது 15.9 என ஆய்வு கண்டறிந்தது. மேலும், 41.8 விழுக்காட்டினர் போதை உட்கொள்ளும் பழக்கத்தை 18 வயதிலேயே தொடங்குவதாகவும் ஆய்வு தெரிவித்தது.
ஆய்வின் முடிவுகளை மேற்கோள் காட்டி பேசிய திரு டியோ, "கடந்த ஆண்டு சிங்கப்பூர்வாசிகளில் 0.7 விழுக்காட்டினர் போதைப் புழங்கிகளாக இருந்ததாக ஆய்வு குறிப்பிடுகிறது. விகிதாசாரத்தில் இது சிறியதாகத் தோன்றினாலும் மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் 18,000 பேர் என்பது பெரிய எண்ணிக்கை. இந்த முடிவுகள் நமக்கு கவலை அளிக்கின்றன," என்றார் அவர்.
ஆய்வில் கலந்துகொண்டோர் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிப்பது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினர். சட்ட நடவடிக்கை கைமேல் பலனளிக்கும் என்று 74.4 விழுக்காட்டினர் கூறினர். கைது செய்யப்படலாம் என்ற பயத்தை ஏற்படுத்துவதோடு போதைப்பொருள்களால் உடல்நலம் எந்த அளவுக்குப் பாதிக்கும் என்ற விழிப்புணர்வுத் தகவல்களையும் பரப்ப வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
கஞ்சா, எக்ஸ்டஸி மற்றும் மெத்தம்ஃபெட்டாமைன் ஆகிய போதைப்பொருள்களே பெரும்பாலும் உட்கொள்ளப்படுவதாகவும் இவற்றில் கஞ்சாவையே முதன்முதலில் அவர்கள் முயன்று பார்ப்பதாகவும் ஆய்வு குறிப்பிட்டது. உட்கொண்டால் எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் கவலை, மன அழுத்தத்தைப் போக்கும் என்ற தவறான நினைப்பும் அவர்கள் போதைப்பொருளை நாடுவதற்கான முதல் இரு காரணங்கள் என்றும் ஆய்வு கண்டறிந்தது.
கஞ்சா கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என 1990ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நான்காண்டுகளில், அந்தத் தண்டனைக்காகக் குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேல் கஞ்சா கடத்துவது 15 விழுக்காடு முதல் 19 விழுக்காடு வரை குறைந்ததாக திரு டியோ விளக்கினார்.
"போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான நமது கடுமையான சட்டத்துக்கு, குறிப்பாக மரண தண்டனைக்கு எதிராக பிரசாரம் செய்வோரும் உள்ளார்கள். அவர்கள் ஒரு எளிய தகவலைப் பரப்ப தங்களது நேரத்தையும் உழைப்பையும் செலவிடுவார்கள் என்று நம்புகிறேன்.
"போதைப்பொருள்கள் ஆபத்தானவை. அதிலிருந்து விலகி இருப்பதன் மூலம் உங்களையும் மற்றவர்களையும் ஆபத்திலிருந்து காப்பாற்றுங்கள் - என்ற தகவல்தான் அது," என்றார் மூத்த அமைச்சர்.

