சிங்கப்பூர்வாசிகளும் வருகையாளர்களும் அடுத்த ஆண்டு முதல் கடப்பிதழைப் பயன்படுத்தாமலேயே சிங்கப்பூரை விட்டு வெளியேறலாம். புதிய தானியக்க முறை அதற்குக் கைகொடுக்கும். கார் மூலம் சிங்கப்பூரிலிருந்து வெளியேறுவோர் தரை வழி சோதனைச் சாவடிகளில் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம். அல்லது பயணிகள் கூடங்களில் அமைக்கப்படும் புதிய தானியக்க எல்லைக் கட்டுப்பாட்டு முறையை (ஏபிசிஎஸ்) பயன்படுத்தலாம்.
தானியக்க முறை விரிவுபடுத்தப்படுவதால் எல்லா குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளிலும் அதிகாரிகள் மூலம் நேரடியாக வெளியேறும் அனுமதி பெறும் முறை படிப்படியாகக் கைவிடப்படும். அதற்குப் பதிலாக, 2024ஆம் ஆண்டு முதலாம் காலாண்டில் தானியக்க எல்லைக் கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்தும் 800 தானியக்க வரிசைகள் இடம்பெறும். சிங்கப்பூர் எக்ஸ்போவில் நேற்று நடைபெற்ற தனது செயல்திட்ட கருத்தரங்கில் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் இந்தத் தகவலைத் தெரிவித்தது.
பயணிகளின் உடலங்க அடையாளத்தைப் பயன்படுத்தி வெளியேற்ற அனுமதி பெறும் முறை கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய அனுமதி அணுகுமுறையின் ஒரு பகுதி.
விரைவாகவும் அதிக பாதுகாப்பாகவும் பயணிகளின் குடியேற்ற, சுங்க அனுமதியைப் பெறும் வகையில் இந்த புதிய உருமாற்றத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது முதல்முறையாக 2019ஆம் ஆண்டு சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்திலும் துவாஸ் சோதனைச் சாவடியிலும் சோதித்துப் பார்க்கப்பட்டது.
அதேபோல, காரில் செல்வோருக்கான தானியக்க அனுமதி முறை 2022ஆம் ஆண்டு சோதனை ஓட்டத்திற்கு விடப்பட்டது. அப்போது கிட்டத்தட்ட 94 விழுக்காட்டுப் பயணிகள் அதிகாரிகளின் உதவி இன்றி அனுமதி பெற்று வெளியேறினர். தரைவழி சோதனைச் சாவடிகளில் கட்டம் கட்டமாக அறிமுகம் செய்வதற்கு முன்னர் உள்துறைக் குழுவின் அறிவியல் தொழில்நுட்ப முகவையுடன் இணைந்து தானியக்க முறையை மேம்படுத்துவதன் தொடர்பில் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் செயல்படும்.
இதன் முதற்கட்ட அறிமுகம் 2024ன் தொடக்கப் பகுதியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, கடப்பிதழின் துணையின்றி கியூஆர் குறியீட்டை மட்டும் பயன்படுத்தி சிங்கப்பூரிலிருந்து வெளியேற முடியும். காரில் செல்வோர் MyICA கைப்பேசிச் செயலி வாயிலாக தங்களுக்கான கியூஆர் குறியீட்டை உருவாக்கி, குடிநுழைவுக் கூடங்களில் அக்குறியீட்டை ஒளிவருடவேண்டும். அப்போது குடிநுழைவு அதி காரிகள் அந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி பயணிகளின் முக அடையாளத்தைச் சோதிப்பர். சொந்த விவரங்கள் அடங்கிய இதே குறியீட்டை அந்தப் பயணிகள் தங்களின் அடுத்தடுத்த பயணத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். கடப்பிதழில் விவரங்கள் மாற்றம் செய்யப்படாத வரை இந்தக் குறியீட்டை அவர்கள் பயன்படுத்தலாம்.
இந்த தானியக்க முறை துவாஸ் சோதனைச் சாவடியில் 2026லும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 2028லும் அறிமுகம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு முதல் எல்லா சோதனைச் சாவடிகளிலும் கட்டம் கட்டமாக அறிமுகம்