30 ஆண்டுக்குப் பிறகு சின் மிங்கில் புதிய வீடுகள்

2 mins read

அப்­பர் தாம்­சன் வட்­டா­ரத்­தில் உள்ள சின் மிங் ரோட்­டில் 900க்கும் மேற்­பட்ட வீவக வீடு­கள் கட்­டப்­பட உள்­ளன. கடந்த 1988ஆம் ஆண்­டுக்­குப் பிறகு அந்த வட்­டா­ரத்­தில் புதிய வீடு­கள் கட்­டப்­ப­டு­வது இதுவே முதல்­முறை.

மொத்­தம் ஐந்து குடி­யி­ருப்பு புளோக்­கு­கள் அங்கு கட்­டப்­படும். அவை அனைத்­தும் 2027ஆம் ஆண்டு இரண்­டாம் காலாண்­டில் முடிக்­கத் திட்­ட­மிடப்­பட்­டுள்­ளது.

அதன் பிறகு 984 புதிய வீடு­கள் அங்கு இருக்­கும். 22 மாடி­கள் முதல் 28 மாடி­கள் வரை­யில் அந்த ஐந்து புளோக்­கு­களும் கட்­டப்­படும்.

ஏழு மாடி கார்­நிறுத்­த­மும் சமூ­கக் கூடங்­கள் மற்­றும் கட்­டட உச்­சித் தோட்­டங்­களும் அங்கு இடம்­பெ­றும் என கட்­டு­மா­னத் தளத்­தில் எழுதி வைக்­கப்­பட்டு உள்­ளது.

கட்­டு­மா­னத் தளத்­தின் புகைப்­ப­டங்­கள் ரெடிட் சமூக ஊட­கத்­த­ளத்­தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டன.

சின் மிங் ரோடு புளோக் 25ன் அருகே உள்ள தளத்தை கடந்த புதன்­கி­ழமை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர் சென்று பார்த்­த­போது அங்கு கட்­டு­மா­னப் பணி­கள் நடந்­து­கொண்டு இருந்­தன. பிடிஓ திட்­டத்­தின்­கீழ் அந்த வீடு­கள் கட்­டப்­ப­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

பொது­வாக, பிடிஒ திட்­டங்­கள் பிப்­ர­வரி, மே, ஆகஸ்ட் மற்­றும் நவம்­பர் மாதங்­களில் தொடங்­கப்­படும். ஆயி­னும், வரும் மே, ஆகஸ்ட் மாதங்­களில் பிடிஓ திட்­டங்­கள் தொடங்­கப்­ப­டு­வது குறித்து வீவ­க­வின் இணை­யத்­தளத்­தில் எது­வும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

இதற்கு முன்­னர் 1988ஆம் ஆண்டு சின் மிங்­கில் வீவக புளோக்­கு­கள் கட்­டப்­பட்­ட­தாக சொத்­துச் சந்தை பகுப்­பாய்­வாளர்­கள் கூறி­னர். அப்­போது சின் மிங் அவென்­யூ­வில் 945 வீடு­கள் கட்­டப்­பட்­ட­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

அந்த வட்­டா­ரத்­தில் பிடிஓ வீடு­க­ளுக்­கான தேவை தேக்­க­மடைந்து இருக்­க­லாம் என்று ஹட்­டன்ஸ் ஏஷியா சொத்து நிறு­வ­னத்­தின் ஆராய்ச்­சிப் பிரிவு மூத்த இயக்­கு­நர் லீ சே டெக் கூறி­னார்.

சின் மிங் திட்­டத்­தின் ஒவ்­வொரு வீட்­டுக்­கும் இரண்டு முதல் நான்கு விண்­ணப்­பங்­களே இடம்­பெ­றக்­கூ­டும் என்று அவர் எதிர்­பார்க்­கி­றார்.