குடும்ப நீதி சீர்திருத்த மசோதாவில் பரிந்துரைக்கப்படும் திருத்தம் பராமரிப்புத் தொகையைத் தராமல் முன்னாள் வாழ்க்கைத்துணையால் ஏமாற்றப்படுவோருக்கு நீதி கிடைக்க உதவும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாம் வாசிப்புக்காகத் தாக்கல் செய்யப்பட்டபோது ஆற்றிய உரையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் வாழ்க்கைத்துணைக்குப் பராமரிப்புத் தொகை வழங்குவது தொடர்பான அமலாக்க நடவடிக்கையில் பரிந்துரைக்கப்படும் திருத்தம் மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தும் என்றார் அமைச்சர்.
உத்தரவை மீறுவதைத் தடுக்கும் நோக்கில் கடுமையான நடவடிக்கை, உண்மையாகவே பராமரிப்புத் தொகையைத் தர இயலாமல் சிரமப்படுவோரின் சிக்கல்களுக்கு நிலையான தீர்வுகாண உதவுதல், உத்தரவை மீறுவோர் மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்வதை எளிதாக்குதல் ஆகியவை அவை.
"பராமரிப்புத் தொகை வழங்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மீண்டும் மீண்டும் மீறப்பட்டால் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கை மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறது.
"பாதிக்கப்பட்டோர் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும். இருதரப்புக்கு இடையிலும் விரிசலை அது அதிகப்படுத்தும்," என்று அமைச்சர் கூறினார்.
எடுத்துக்காட்டாக, குழந்தைகளின் பராமரிப்புப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒருவர், முன்னாள் வாழ்க்கைத்துணை பராமரிப்புத் தொகையை உரிய நேரத்தில் தரத் தவறும்போது பிள்ளைகளைப் பார்க்க அவருக்கு அனுமதி மறுக்கக்கூடும் என்பதை திரு சண்முகம் சுட்டினார்.
இத்தகைய விவகாரங்கள், மணவிலக்கிற்குப் பிறகு நீண்டகாலத்திற்குத் தொடரும்போது அது மணமாகிப் பிரிந்தோரை மட்டுமன்றி அவர்களது பிள்ளைகளையும் அவர்களைச் சுற்றி இருப்போரையும் பாதிக்கக்கூடியவை என்றார் அவர்.
பராமரிப்பு அமலாக்கத் திட்டம் அத்தகைய சூழலைச் சிறிதளவாவது மாற்ற உதவும்.
மணவிலக்கு பெற்றபின் சச்சரவின்றி வாழ்க்கையைத் தொடர வகைசெய்யும் என்றார் அவர்.
2017ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில், ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்பு அமலாக்கம் தொடர்பில் சராசரியாக 2,700 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில் 15 முதல் 20 விழுக்காட்டு விண்ணப்பங்கள் அதே ஆண்டில் மீண்டும் மீண்டும் உத்தரவை மீறுவோர் தொடர்பில் விண்ணப்பிக்கப்பட்டவை.
பராமரிப்புத் தொகை ஏய்ப்பில் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் வாழ்க்கைத்துணை பராமரிப்புத் தொகையைத் தராமல் ஏய்க்கும்போது, ஏற்கெனவே பிள்ளைகள், வேலை என இரு முனைகளுக்கு இடையில் திணறும் அவர்களுக்குக் கவலையும் எரிச்சலும் ஏற்படுவதை அமைச்சர் எடுத்துரைத்தார்.
மசோதா சட்ட அங்கீகாரம் பெற்றால், சம்பந்தப்பட்டவர் களின் சொத்து, வருமான விவரங்களைக் கேட்டுப் பெறும் அதிகாரம் அமலாக்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
வங்கிகள், மத்திய சேம நிதிக் கழகம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளிடம் இருந்து அவர்கள் தகவல் பெற முடியும்.
ஒருவர் உண்மையிலேயே பராமரிப்புத் தொகையைத் தர இயலாதவரா, வசதி இருந்தும் ஏய்க்கிறாரா என்று ஆராய்ந்து முடிவெடுப்பதில் அமலாக்க அதிகாரிகளுக்கு அந்தத் தகவல்கள் உதவும்.
நீதிமன்றம் அவர்கள் தொடர்பில் பொருத்தமான உத்தரவைப் பிறப்பிக்க அவை வழிவகுக்கும்.
பாரமரிப்புத் தொகையை உத்தரவில் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தியதற்கு ஆதாரம் காட்டும்படி உத்தரவிட இயலும்.
அவ்வாறு காட்டத் தவறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புண்டு.
உடல்நலக் குறைவு, முதுமை போன்ற குறிப்பிட்ட சூழல்களில் மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்.
புதிய சட்டத்தின்கீழ் அமலுக்கு வரும் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் வசதி இருந்தும் பராமரிப்புத் தொகையைத் தராமல் மீண்டும் மீண்டும் ஏய்க்கும் சம்பவங்களைக் குறைக்கும் நோக்கம் கொண்டவை.
மணவிலக்கு பெற்ற பிறகும் பெற்றோர் இருவரும் பிள்ளை வளர்ப்பில் அவரவர் பங்கை ஆற்றவும் மணவிலக்கிற்குப் பிறகான வாழ்க்கை சுமுகமாகச் செல்வதை உறுதிசெய்யவும் அண்மை ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் ஆகப் பெரிய முயற்சியாகக் குடும்ப நீதி சீர்திருத்த மசோதா அமைகிறது.

