குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோர், தங்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து மேம்பட்ட பாதுகாப்பைப் பெற முடியும்.
மாதர் சாசன (குடும்ப வன்முறையும் மற்ற விவகாரங்களும்) திருத்த மசோதாவின்கீழ் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டால் அது சாத்தியமாகும்.
நாடாளுமன்றத்தில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மசோதாவானது தனிநபர் பாதுகாப்பு ஆணை தொடர்பில் மூன்று புதிய அம்சங்களைச் சேர்க்கும்.
குடும்ப உறுப்பினர்மீது ஒருவர் வன்முறையைக் கையாள்வதைத் தடுக்கும் நீதிமன்ற ஆணைகள், பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வெளியேயும் அவர் அடிக்கடி செல்லும் இடங்களுக்கும் குற்றவாளி செல்லாமல் தடுத்தல், பாதிக்கப்பட்டவரைப் பார்க்க அல்லது அவருடன் தொடர்புகொள்ள முடியாமல் குற்றவாளியைத் தடுத்தல் ஆகியவையே அம்மூன்று புதிய அம்சங்கள்.
குற்றவாளி மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் கட்டாயமாக சிகிச்சை பெறவும் நீதிமன்றம் உத்தரவிடலாம்.
சென்ற ஆண்டு குடும்ப வன்முறை தொடர்பில் 2,254 புதிய புகார்களைச் சமுதாய, குடும்ப அமைச்சு விசாரித்தது. 2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,346ஆக இருந்தது.
தேசிய வன்முறைத் தடுப்பு, பாலியல் துன்புறுத்தல் நேரடி அழைப்பு எண்ணிற்குக் கடந்த 2021ஆம் ஆண்டு 8,400 அழைப்புகள் வந்த நிலையில், சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை 10,800ஆக அதிகரித்தது.
தனிநபர் பாதுகாப்பு ஆணை கோருவதற்கான குறைந்தபட்ச வயதை 21லிருந்து 18ஆகக் குறைக்கவும் புதிய மசோதா வழிவகுக்கும்.
இதனால், துன்புறுத்தலை எதிர்கொண்ட இளம் வயதினரும் பாதுகாப்பு கோரலாம்; தனிநபர் பாதுகாப்பு ஆணை சார்ந்த நடவடிக்கைகளில் தாங்களே முன்னிலையாகலாம்.
குடும்ப வன்முறைப் பணிக்குழு கடந்த 2021ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தப் பரிந்துரைகளை வெளியிட்டது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்கும் உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிமும் அக்குழுவின் தலைவர்களாக இருந்தனர்.
பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் 2022 ஏப்ரலில் சமுதாய, குடும்ப அமைச்சு பொதுமக்களின் கருத்துகளை அறிந்தது. பொதுமக்கள் அம்மாற்றங்களுக்குப் பேராதரவு தெரிவித்தனர்.
புதிய மாற்றங்களின்படி, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களும் பாதுகாக்கப்படும்.
குடும்ப வன்முறை சார்ந்த பாதுகாப்பு ஆணைகளை மீறுவோர்க்கான தண்டனைகளும் கடுமையாக்கப்படும்.
முதல்முறை அக்குற்றம் புரிவோர்க்கு $10,000 வரை அபராதம் அல்லது ஓராண்டுவரை சிறையும் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம். இப்போது அவர்களுக்கு $2,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதம்வரை சிறை அல்லது அவ்விரு தண்டனைகளையும் விதிக்க முடியும்.
அத்துடன், குற்றவாளிகள் மறுவாழ்வு நடவடிக்கைகளில் பங்கேற்பதையும் புதிய மசோதா உறுதிசெய்யும். ஆலோசனை, கட்டாய சிகிச்சைக்கான மதிப்பீட்டு ஆணை, கட்டாய சிகிச்சை ஆகியவற்றை மீறுவோர்க்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அவசரகால உதவிக் குழு உடனடியாகப் பாதுகாப்பு வழங்கும்
அதிக ஆபத்தை விளைவிக்கவல்ல குடும்ப வன்முறை தொடர்பில் புகார் வந்தால், பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக உதவி, அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், குடும்ப வன்முறை அவசரகால உதவிக் குழுவைக் காவல்துறை சம்பவ இடத்திற்கு அனுப்பும்.
சமுதாய, குடும்ப அமைச்சின்கீழ் வரும் இந்தப் புதிய உதவிக் குழு 24 மணி நேரமும் செயல்படும்.
பாதிக்கப்பட்டவரின் வீட்டில் அல்லது அவர் அடிக்கடி செல்லும் இடங்களில் அவரைத் துன்புறுத்தியவர் இருப்பதையும் தொடர்புகொள்வதையும் தடுக்கும் வகையில் உதவிக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் அவசரகால ஆணையைப் பிறப்பிக்க முடியும்.
பாதிக்கப்பட்டவர் தனிநபர் பாதுகாப்பு ஆணை கோரி விண்ணப்பம் செய்ய ஏதுவாக அந்த ஆணை 14 நாள்களுக்கு நடப்பிலிருக்கும். அதனை மீறுவோர் கைதுசெய்யப்படலாம்.
மாதர் சாசனத் திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள மாற்றங்களில் இப்புதிய 24 மணி நேர அவசரகால உதவிக் குழுவும் அடங்கும்.

