கேரளாவில் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், கொட்டாரக்கரா பகுதியைச் சேர்ந்த 24 வயது பள்ளி ஆசிரியர் சந்தீப் மதுவிற்கு அடிமையாகி இருந்ததுடன் போதைப் பொருள்களையும் உட்கொண்டு வந்துள்ளார்.
குடும்பத்தினருடன் அவர் நேற்று முன்தினம் இரவு தகராறில் ஈடுபட்டுள்ளார். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடமும் தகராறு செய்துள்ளார். தன்னைக் காப்பாற்றும்படி காவல்துறையின் அவசர சேவை எண்ணுக்கு அவர் அழைத்ததை அடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்தனர். பின் காயம் அடைந்திருந்த அவரை கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சந்தீப்புக்கு காலில் ஏற்பட்ட காயத்துக்கு 22 வயது மருத்துவர் வந்தனா தாஸ் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது சந்தீப் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திடீரென சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடிய கத்திரிக்கோலை எடுத்து வந்தனா தாஸை அவர் குத்தியுள்ளார். அவரைப் பிடிக்க முயன்ற காவல்துறையினரையும் மருத்துவமனை ஊழியர்களையும் சந்தீப் கத்திரிக்கோலால் குத்தியுள்ளார். இதனால் அவர்களும் காயம் அடைந்தனர். மருத்துவமனையையும் சந்தீப் சேதப்படுத்தினார்.
காயமடைந்த மருத்துவர் வந்தனா தாஸை திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார் என ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சந்தீப்பை விசாரித்து வருகின்றனர். அவர் எதற்காக மருத்துவரைத் தாக்கினார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
"நோயாளியின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்படும் அறைக்குள் எங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அவர் மருத்துவருடன் தனியாக இருந்தார். திடீரென்று, சலசலப்பு ஏற்பட்டது. மருத்துவர் உதவிக்காக அலறியடிபடி வெளியே ஓடினார். தொடர்ந்து கத்திரிக்கோல், கத்தியைப் பிடித்தபடி 'உன்னைக் கொன்றுவிடுவேன்' என்று அந்த ஆடவர் கத்திக்கொண்டிருந்தார்," என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என அனைத்து பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெண் மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

