சிங்கப்பூர் பக்கம் பாதி நிறைவு

3 mins read
4d49ec44-3afb-4b08-89bd-5eb015dffeb5
-

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் இணைப்புப் பாதை கட்டுமானம்

ஜோகூர் பாரு-சிங்­கப்­பூர் விரைவு ரயில் இணைப்புப் பாதை கட்­டு­மா­னம் சிங்­கப்­பூர் தரப்­பில் பாதி நிறை­வ­டைந்து இருக்­கிறது. அந்த ரயில் திட்­டம் 2026 முடி­வில் செயல்­பட ஆயத்­த­மா­கும் வகை­யில் முன்­னேறி வரு­கிறது.

போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று இதனைத் தெரி­வித்­தார்.

திரு ஈஸ்­வ­ர­னும் மலே­சிய போக்கு­வரத்து அமைச்­சர் ஆண்டனி லோக்­கும் நேற்று ஜோகூர் பாரு­வில் கட்­டு­மான இடம் ஒன்­றைப் பார்­வை­யிட்­ட­னர்.

ஜோகூர் நீரி­ணை­யில் சிங்­கப்­பூ­ரை­யும் ஜோகூர்­ பா­ரு­வை­யும் இணைத்­த­படி அமை­யும் ரயில் மேம்­பா­லச் சாலையைத் தாங்­கும் தூண்­களில் ஒரு தூண் அங்கு கட்­டப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, இந்த விரைவு ரயில் வழித்­தட கட்­டு­மா­னம் பற்றி கருத்து கூறிய மலே­சிய அமைச்­சர், மலே­சிய தரப்­பில் 36 விழுக்­காட்டு பணி­கள் நிறை­வ­டைந்து இருப்­ப­தா­கக் கூறி­னார்.

இருதரப்­பி­லும் சாதிக்­கப்­பட்டு உள்ள முன்­னேற்­றத்­தின் அடிப்­ப­டை­யில் பார்க்­கை­யில், இந்த விரைவு ரயில் சேவை 2026 முடி­வில் தொடங்­கி­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் தரப்­பில் கட்­டு­மா­னப் பணி­கள் கடந்த மார்ச் மாதம் 45 விழுக்­காட்டு அளவை எட்­டி­யி­ருந்­தன.

மேம்­பால ரயில் பாதையைத் தாங்கும் தூண்­க­ளைப் பதிக்­கும் பணிகள் அடுத்த ஆண்டு முதல் காலாண்­டில் முடி­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அமைச்­சர் ஈஸ்­வ­ரன் நேற்று மலே­சி­யா­வுக்கு ஒரு நாள் அதி­கா­ர­பூர்வ பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தார்.

அதன் ஒரு பகு­தி­யாக அவர் கட்டு­மான இடத்­தைப் பார்­வை­யிட்­டார்.

மலே­சிய அமைச்­ச­ரு­டன் பல அம்­சங்­கள் பற்றி தான் விவா­தித்­த­தா­க­வும் இருதரப்பு உற­வைப் பலப்­ப­டுத்த தாங்கள் கொண்­டுள்ள உறு­தியை இரு நாடு­களும் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­ய­தா­க­வும் திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

கடல், தரை வழி­யாக இரு நாடு­களுக்­கும் இடை­யில் போக்­கு­வ­ரத்து இணைப்­பு­களை மேலும் எப்­படி மேம்­ப­டுத்­த­லாம் என்­பது பற்றி தாங்­கள் விவா­தித்­த­தா­க­வும் திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

ஜோகூர் பாரு-சிங்­கப்­பூர் விரைவு ரயில் இணைப்­புப் பாதை 4 கி.மீ. நீளம் கொண்­ட­தாக இருக்­கும்.

அது செயல்­ப­டத் தொடங்­கும் போது ஜோகூர் பாரு­வில் உள்ள புக்கிட் சாகா­ரில் இருந்து சிங்­கப்­பூ­ரில் உள்ள உட்லண்ட்ஸ் நார்த்­துக்கு மக்­கள் பயணம் செய்ய முடி­யும்.

இங்­கி­ருந்து அங்­கும் அங்­கி­ருந்து இங்­கும் ஐந்தே நிமி­டங்­களில் சென்று வர­லாம். அந்த இடை­வழி ரயில் சேவை வழி­யாக ஒவ்­வொரு திசை­யி­லும் ஒரு மணி நேரத்­தில் 10,000 பய­ணி­கள் வரை பய­ணம் செய்ய முடி­யும்.

அத­னால் கடற்­பா­தை­யில் போக்கு­வரத்­துத் தேக்­கம் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் பய­ணி­கள் அந்த விரைவு ரயி­லில் இருந்து ஒரு சுரங்­கப்­பாதை வழி­யாக தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் வழித்­த­டத்­தில் ஓடும் ரயில்­களுக்கு மாறிக்­கொள்­ள­லாம்.

சிங்­கப்­பூர், மலே­சிய இரு நாடு­களை­யும் சேர்ந்த சுங்க, குடி­நு­ழைவு, தனிமைப்படுத்தல் வச­தி­கள் உட்­லண்ட்ஸ் நார்த்­தில் ஒரே கட்­ட­டத்­திலும் புக்­கிட் சாகார் நிலை­யத்­தி­லும் அமைந்து இருக்­கும்.

அதா­வது பய­ணி­கள் புறப்­படும் போது மட்­டும் குடி­நு­ழைவு அதி­காரி­யிடம் அனு­மதி பெற வேண்­டும். சென்று சேரும் இடத்­தில் அனு­மதி பெற வேண்­டிய அவ­சி­யம் இருக்­காது.

ஜோகூர் பாரு-சிங்­கப்­பூர் விரைவு ரயில் பற்றி 2010ல் அறி­விக்­கப்­பட்­டது. 2018ல் அந்த ரயில் திட்­டம் தயா­ராக இருந்­தது. பிறகு 2024 முடி­வில் சேவை­யைத் தொடங்­க­லாம் என்று 2017ஆம் ஆண்­டில் ஒப்­புக்­கொள்­ளப்­பட்­டது.

அது­வும் மலே­சிய வேண்­டு­கோ­ளின் பேரில் 2019ல் நிறுத்தி வைக்­கப்­பட்­டது. இந்­தத் திட்­டம் 2020 ஜூலை­யில் அதி­கா­ர­பூர்­வ­மாக மீண்­டும் தொடங்­கி­யது.