தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்) அந்தப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு தகவல்தொழில்நுட்ப அமைச்சராக ஆக்கப்பட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு, தகவல்தொழில்நுட்பத்துறையில் முன்னணி மாநிலமாக மீண்டும் திகழ பாடுபடப்போவதாக டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2021 மே மாதம் 7ஆம் தேதி திமுக ஆட்சிக்கு வந்தது.
அது முதல் மூன்றாவது முறையாக நேற்று அமைச்சரவை மாற்றம் கண்டது. அதன்படி ஐந்து அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன.
அமைச்சர் மனோ தங்கராஜ் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
புதிய நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பு ஏற்கிறார். இவர், மனிதவள மேலாண்மைத் துறைக்கும் பொறுப்பு வகிப்பார். அமைச்சர் மனோ தங்கராஜ் இனி பால்வளத்துறையை கவனிப்பார்.
தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் சாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
புதிய அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட டி.ஆர்.பி.ராஜாவுக்குத் தொழில்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் துறையை இதுவரை தங்கம் தென்னரசு கவனித்து வந்தார்.
திமுக தலைமைக்கும் நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையில் பிரச்சினை தலைதூக்கி இருப்பதாக அண்மைய நாட்களில் செய்திகள் தலைகாட்டின.
திமுக, ஒரு வாரத்திற்கு முன் கட்சியின் பேச்சாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் பிடிஆர் பெயர் இல்லை. அதற்கு முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டார்.
திமுக தலைவரும் முதல்வரு மான ஸ்டாலின் குடும்பத்தினர் சட்டவிரோதமான முறையில் பெரும் பணம் சேர்த்து இருப்பதாக அந்த ஒலிப்பதிவில் பிடிஆர் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், தான் அப்படி எதையும் கூறவில்லை என்றும் அந்த ஒலிப்பதிவு தில்லுமுல்லு வேலை என்றும் பிடிஆர் அறிக்கை வெளியிட்டார். கடந்த வாரம் முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அந்த விவகாரம் பற்றி பிடிஆர் விளக்கமும் அளித்தார்.
இருந்தாலும்கூட அந்த ஒலிப்பதிவு விவகாரம் கட்சியினரிடத்திலும் முதல்வர் குடும்பத்திலும் பிரச்சினைகளைக் கிளப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் அமைச்சரவை மாற்றப்பட்டு புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

