தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணியினர் நேற்று வரலாற்று சாதனை நிகழ்த்தினர். மகளிர்க்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா தங்கப்பதக்கம் வென்றார். 11.41 வினாடிகளில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
26 வயதான அவர் இதே விளையாட்டுப் போட்டியில் கடந்த திங்கட்கிழமை 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். சிங்கப்பூர் வீராங்கனை ஒருவர் ஒரே தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்த இரு பிரிவிலும் முதலாவதாக வந்து தங்கம் வென்றிருப்பது இதுவே முதல்முறை.
மேலும், 100 மீட்டர் ஓட்டத்தில் அவரது முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். கடந்த ஆண்டு ஹனோயில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கமும் அதற்கு முன்னர் 2015, 2017 மற்றும் 2019 போட்டிகளில் வெண்கலமும் சாந்தி வென்றிருந்தார். நேற்று முதலாவதாக வென்றதும் பேசிய அவர், "தங்கம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. தென்கிழக்காசியப் போட்டிகளில் இது எனது ஆறாவது பதக்கம்," என்றார்.
11.58 வினாடிகளில் ஓடி முடித்த தாய்லாந்து வீராங்கனை சுபானிச் பூல்கெர்ட் வெள்ளியும் 11.75 வினாடிகள் ஓடிய வியட்னாம் வீராங்கனை தி நி யென் டிரான் வெண்கலமும் வென்றனர்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூருக்கு நேற்று பதக்கம் கிடைத்தது. சிங்கப்பூரின் மார்க் லுவிஸ் 10.39 வினாடிகள் ஓடி 0.02 வினாடி வித்தியாசத்தில் முதலிடத்தைத் தவறவிட்டு வெள்ளி வென்றார்.
2011ஆம் ஆண்டு கேரி இயோ வெள்ளிப் பதக்கம் வென்றதற்குப் பிறகு 100 மீட்டர் ஆண்கள் ஓட்டத்தில் சிங்கப்பூருக்கு எந்தவொரு பதக்கமும் கிடைக்காமல் இருந்தது. அந்தக் குறையை நேற்று லுவிஸ் தீர்த்தார். தாய்லாந்து வீரருக்குத் தங்கம் சென்றது. நூலிழை வித்தியாசத்தில் இருவரும் முடித்ததால் வெற்றியை கச்சிதமாகத் தீர்மானிக்குமாறு சிங்கப்பூர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆயினும், அதற்குப் பலன் கிட்டவில்லை.
20 வயதாகும் லுவிஸ் கடந்த ஆண்டு ஹனோயில் இதே 100 மீட்டர் ஓட்டத்தில் அறிமுகமானபோது வெண்கலம் வென்றிருந்தார்.
1969ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஓட்டத்தில் சிங்கப்பூருக்கு இன்னும் தங்கம் கிட்டவில்லை.

