ஜூலை 1 முதல் விதிமுறை அறிமுகம்
மின்சுற்று துண்டிப்பான் எனப்படும் 'சர்க்கிட் பிரேக்கர்' சாதனத்தை வீவக வீடுகளும் தனியார் வீடுகளும் ஜூலை 1 முதல் பொருத்த வேண்டும்.
இருப்பினும் இதற்கு 2025 ஜூலை 1 வரை இரண்டு ஆண்டு அவகாசம் வழங்கப்படும். அந்த தேதிக்குள் சர்க்கிட் பிரேக்கர் பொருத்தப்படவில்லை எனில் $5,000 அபராதம் விதிக்கப்படும்.
இந்தச் சாதனத்தைப் பொருத்துவதற்கும் மின்கம்பிகளை அதற்கேற்ப மாற்றி அமைப்பதற்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வீடுகளின் தன்மைக்கேற்ப சலுகைகளை வழங்கும்.
1985 ஜூலைக்கு முன்னர் கட்டப்பட்ட ஓரறை மற்றும் ஈரறை வீடுகளுக்கு இதற்கான செலவைக் கழகம் முழுமையாக ஏற்கும். அதேநேரம், பெரிய வீடுகளில் குடியிருப்போர் 85 விழுக்காடு வரை கட்டணச் சலுகையை எதிர்பார்க்கலாம்.
மின்கசிவு ஏற்படும்போதும் மின்விநியோகத்தைத் தடுத்து நிறுத்த சர்க்கிட் பிரேக்கர் சாதனம் பயன்படுகிறது. பழைய, பழுதடைந்த மின்கம்பிகள் காரணமாகவும் தவறான முறையில் மின்சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மின்கசிவு ஏற்படலாம்.
1985 ஜூலை முதல் கட்டப்பட்ட வீடுகளுக்கு இந்த சாதனங்கள் அவசியம். புதுப்பிக்கப்படும்போது மின்கம்பிகள் மாற்றப்பட்டிருக்கும் பழைய வீடுகளில் இந்தச் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கும்.
சிறிய விகிதத்திலான வீடுகள் இன்னும் பழைய காலத்தில் பின்பற்றப்பட்ட மின்சுற்று சாதனங்களைப் பெற்றுள்ளதாக வீவகவும் எரிசக்திச் சந்தை ஆணையமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
1985க்கு முன்னர் கட்டப்பட்ட ஓரறை மற்றும் ஈரறை வீடுகளில் கிட்டத்தட்ட 1.3% வீடுகளில் சர்க்கிட் பிரேக்கர் சாதனம் இல்லை என்று நம்பப்படுகிறது.
மிதமிஞ்சிய மின்னோட்டத்தில் இருந்து பாதுகாக்க 'ஃபியூஸ்' எனப்படும் மின்காப்பு இழைகளையே அவை சார்ந்திருப்பதாகவும் அவை தெரிவித்தன.
எனவே, சர்க்கிட் பிரேக்கர் பொருத்தப்படாத பழைய வீடுகளின் பாதுகாப்புக் கருதி புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக எரிசக்திச் சந்தை ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

