சிங்கப்பூரில் நேற்று பதிவான 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் இந்த ஆண்டின் ஆக அதிக வெப்பமாகும்.
சுவா சூ காங் தெற்கு வட்டாரத்தில் நேற்றுப் பிற்பகல் 2.46 மணிக்கு பதிவான இந்த வெப்பம் இதற்கு முன்னர் ஏப்ரல் 14ஆம் தேதி அட்மிரல்டியில் பதிவான 36.1 டிகிரியை மிஞ்சிவிட்டது.
37 டிகிரி என்று 1983ஆம் ஆண்டு பதிவானதே சிங்கப்பூர் வரலாற்றில் உச்ச வெப்பம். அந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தெங்கா வட்டாரத்தில் அந்த மிதமிஞ்சிய வெப்பநிலை பதிவானது.
இவ்வாண்டின் வெப்பநிலை குறித்து இதற்கு முன்னர் முன்னுரைத்த சிங்கப்பூர் வானிலை ஆய்வகம், ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் வெப்பம் மே மாதத்தின் முதல் பாதி வரை தொடரலாம் என்று தெரிவித்து இருந்தது. ஆண்டின் எல்லா மாதங்களைக் காட்டிலும் மே மாதம் சூடாக இருப்பது வழக்கம் என்றும் அப்போது அது குறிப்பிட்டு இருந்தது. அதற்கேற்ப இந்த மாதத்தின் முதல் பாதி வெப்பமாகத் தொடர்கிறது. பெரும்பாலான நாள்களில் பிற்பகலில் பதிவான அன்றாட சராசரி வெப்ப நிலை 34 டிகிரியாக உள்ளது.
"மேகமூட்டம் குறைந்த நாள்களில் அன்றாட சராசரி வெப்பம் 35 டிகிரி வரை தொட்டது," என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது.
சூடான சூழ்நிலையைச் சமாளிப்பதில் மாணவர்களுக்கும் அலுவலர்களுக்கும் உதவக்கூடிய நடவடிக்கைகளில் பள்ளிக்கூடங்களில் நடப்பில் இருப்பதாக கல்வி அமைச்சு நேற்று கூறியது.
உதாரணத்திற்கு, வெப்பநிலை பொதுவாக அதிகரித்துக் காணப்படும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை வெளிப்புற நடமாட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பதை மாணவர்கள் குறைத்துக்கொள்ளுமாறு பள்ளிகள் கேட்டுக்கொள்ளும் என்றது அமைச்சு.
"சூட்டைச் சமாளிப்பதில் மாணவர்களுக்குப் பள்ளிகள் சிறப்பான முறையில் உதவலாம். தேவைக்கேற்ப அவர்களின் உடையில் மாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கப்படும். சில நேரங்களில் டி-சட்டை அணிந்தும் அவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்.
"வெப்பமான சூழலையும் மாணவர்கள் மற்றும் அலுவலர்களின் நலனையும் பள்ளிக்கூடங்களுடன் இணைந்து அமைச்சு அணுக்கமாகப் பணியாற்றும்.
"குறிப்பாக, அதிக வெப்பத்தைத் தாங்க இயலாமல் எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் மீது கவனம் செலுத்தப்படும்," என்று அது தெரிவித்தது.

