அங் மோ கியோவில் நேற்று வெப்பநிலை 37 டிகிரி செல்சியசைத் தொட்டது. சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1983 ஏப்ரல் 17ஆம் தேதி தெங்காவில் இதுபோன்ற வெப்பநிலை பதிவாகியிருந்தது.
மேலும், மே மாதம் பதிவான ஆக அதிக வெப்பநிலையும் இதுவே. நேற்றைய தினமே இவ்வாண்டு ஆக வெப்பமான தினம்.
மே மாதத்துக்கான முந்தைய உச்சம் 36.7 டிகிரி செல்சியசாக இருந்தது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு அட்மிரல்டியில் அது பதிவாகியிருந்தது.
தீவின் பல பகுதிகளில் நேற்று வெப்பநிலை 36 டிகிரி செல்சியசைத் தாண்டியதாக வாரியம் தெரிவித்தது.
இந்நிலையில், அடுத்த வாரம் குறுகிய நேரம் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், அது வெப்பத்தைத் தணிக்க உதவலாம் என்று வாரியம் கூறியது. நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக இவ்வாண்டு வெப்பநிலை புதிய உச்சம் தொட்டது.

