பிரதமர் லீ சியன் லூங் தென்னாப்பிரிக்காவுக்கும் கென்யாவுக்கும் ஆறு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அந்தப் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அவர் நேற்று கேப் டவுன் நகரைச் சென்றடைந்தார். தென்னாப்பிரிக்க அனைத்துலக உறவு, ஒத்துழைப்புக்கான அமைச்சர் நெலாடி ஃபாண்டோர் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றார். அப்போது அந்த நாட்டின் ராணுவ அணியினர் இரு நாட்டுக் கொடிகளையும் ஏற்றினர். தென்னாப்பிரிக்காவின் நிர்வாகத் தலைநகரான கேப் டவுனில் பிரதமர் மூன்று நாள்கள் தங்கி இருப்பார். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமாஃபோசாவை பிரதமர் சந்திப்பார். அதிபர் பிரதமருக்கு விருந்தளித்துச் சிறப்பிப்பார். இரு தலைவர்களும் தொழில்துறை வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வார்கள். தென்னாப்பிரிக்க துணை அதிபரான பால் மசாடிலையும் திரு லீ சந்தித்துப் பேசுவார். தென்னாப்பிரிக்காவிலும் அந்த வட்டாரத்திலும் இருக்கும் வெளிநாட்டுச் சிங்கப்பூரர்களை நேற்று பிரதமர் சந்திக்கவிருந்தார். சிங்கப்பூருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையில் அரசதந்திர உறவு ஏற்பட்டு இந்த ஆண்டுடன் 30 ஆண்டுகள் ஆகின்றன. தென்னாப்பிரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் சென்ற ஆண்டில் S$2.79 பில்லியனாக இருந்தது. பிரதமரும் அவருடைய குழுவினரும் நாளை செவ்வாய்க்கிழமை கென்யாவின் நைரோபி நகருக்குச் செல்வார்கள். வெள்ளிக்கிழமை அவர்களின் பயணம் நிறைவடையும்.
கேப் டவுனில் பிரதமர்: தென்னாப்பிரிக்கா, கென்யா ஆறு நாள் பயணம் தொடக்கம்
1 mins read
தென்னாப் பிரிக்காவின் அனைத்துலக உறவு, ஒத்துழைப்பு அமைச்சர் நெலாடி பாண்டோர் கேப் டவுன் விமான நிலையத்தில் பிரதமர் லீ சியன் லூங்கை வரவேற்றார். படம்: சாவ் பாவ் -

