முற்போக்குடைய கொள்கைத் திட்டங்களை முதன்மைப்படுத்தும் 'மூவ் ஃபார்வர்டு' கட்சி (எம்எஃப்பி) தாய்லாந்தில் நேற்று முன்தினம் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது.
தாய்லாந்து தேர்தல் ஆணையம் 99% வாக்கு எண்ணிக்கையை முடித்த நிலையில், கட்சித் தலைவர் 42 வயது பிட்டா லிம்ஜாரோன்ராட், "அரசாங்கம் அமைக்கும் நிலையை அடைந்துவிட்டோம் என உறுதியாக நம்பலாம்," என்றார்.
தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட திருவாட்டி பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு வாழ்த்துக் கூறிய திரு பிட்டா, அரசாங்கம் அமைப்பதற்காக அவரது பியூ தாய் கட்சியுடன் மேலும் நான்கு கட்சிகளுடன் இணைந்து கூட்டணிக் கட்சி அமைக்க அழைப்பும் விடுத்திருந்தார்.
அதையடுத்து 309 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கும் இந்தக் கூட்டணி அரசாங்கத்தில் இணைவதற்கு பியூ தாய் கட்சி அதன் சம்மதத்தை நேற்று தெரிவித்தது. அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் உரிமையை திரு பிட்டா உழைத்துப் பெற்றுள்ளதாகவும் பியூ தாய் கட்சி குறிப்பிட்டது.
"பொருளியல், அரசியல் ரீதியாக ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைத்துக்கொள்ள முடிந்த அளவுக்குத் துரிதமாக அரசாங்கத்தை அமைக்க முயல்வோம்," என்றார் திரு பிட்டா.
தேர்தலின் 500 இடங்களில் ஆக அதிகமாக 151 இருக்கைகளை எம்எஃப்பி வென்றது. கட்சிக்கு ஆதரவாகக் கிட்டத்தட்ட 14 மில்லியன் வாக்குகள் பதிவானதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, நேற்று அதிகாலை வாக்கில் தாய்லாந்துப் பிரதமருக்காக எம்எஃப்பி நிறுத்திய திரு பிட்டா, தாம் நாட்டின் 30வது பிரதமர் ஆவதற்குத் தயாராக உள்ளதாக அறிவித்திருந்தார்.
"நமக்கு ஒரே மாதிரியான கனவுகள், ஆசைகள். அத்துடன் நாம் நேசிக்கும் தாய்லாந்து இன்னும் மேம்படலாம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். நீங்கள் எனக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் உங்களுக்கு சேவையாற்றுவேன்," என்றார் திரு பிட்டா.
தாய்லாந்தில் வாக்களிக்கத் தகுதிபெற்ற 52 மில்லியன் பேரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இத்தேர்தலில் 75.22 விழுக்காட்டினர் வாக்களித்திருந்தனர்.
முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்குத் தொடர்புடைய பியூ தாய் கட்சி இரண்டாவது நிலையில் 141 இடங்களைக் கைப்பற்றியிருந்ததாக ஆணையம் தெரிவித்தது.
இக்கட்சி 2001ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு தேர்தலிலும் ஆக அதிகமான இருக்கைகளைக் கைப்பற்றி வந்தாலும் அது விரும்பிய சாதனையளவு வெற்றி இம்முறை கிட்டவில்லை.
இந்நிலையில் எதிர்காலக் கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு திரு பிட்டாவும் அவரது நிர்வாகக் குழுவினரும் நேற்று சந்திப்பு நடத்தினர்.
இருப்பினும், தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் 60 நாள்கள் உள்ளன.
வெளிநாட்டில் உள்ளோர் அளித்த வாக்குகள் செல்லுபடியாகாது என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
ஐந்து கட்சிகளுடன் எம்எஃப்பி கூட்டணி அரசாங்கம் அமைத்தாலும் பிரதமராக அக்கட்சி நியமித்துள்ளவரைத் தேர்ந்தெடுப்பதற்கு அமைச்சரவையில் கூடுதல் ஆதரவு தேவைப்படும்.
மேலும், முடக்கப்பட்ட ஊடக நிறுவனம் ஒன்றில் பங்குகள் வைத்திருப்பது தொடர்பில் திரு பிட்டா மீது தொடங்கப்பட்ட விசாரணை நடந்துவருவதால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழக்கக்கூடும்.