வரலாற்று ரீதியாக சிங்கப்பூருக்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் ஆழமான தொடர்புகள் இல்லாதபோதும் விரும்புபவர்கள் கைப்பற்றுவதற்கு உண்மையில் அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் கென்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று முன்தினம் கேப் டவுனில் வெளிநாட்டுவாழ் சிங்கப்பூரர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் பேசினார்.
சிறிய, பெரிய ஆப்பிரிக்க நாடுகளிலும் நகரங்களிலும் சிங்கப்பூரர்கள் இருப்பதைக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூர்க் கொடியை அவர்கள் உயரப் பறக்கவிட்டு நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகக் கூறினார்.
தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே தாம் திட்டமிட்டிருந்ததாகவும் தமது முதல் அதிகாரபூர்வ பயணத்தால் அது ஈடேறியுள்ளதாகவும் கூறித் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் பிரதமர் லீ.
"உலகநாடுகளில் முக்கியமான ஒரு நாடு தென்னாப்பிரிக்கா. நமக்கு அங்கு இருக்கும் தோழர்களும் பலர். அவர்களுடன் நாம் தொடர்பில் இருப்பதும் நம் உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதும் நமது வளர்ந்துவரும் பொருளியல் உறவுகளை மேம்படுத்திக்கொள்வதும் முக்கியம்," என்றார் திரு லீ.
சிங்கப்பூர் நிறுவனங்களுடன் ஆப்பிரிக்க நிறுவனங்கள் இணைந்து செயல்படுதல், திருமணத்தால் சிங்கப்பூரர்கள் ஆப்பிரிக்காவில் வேரூன்றுதல், புத்தாக்க முயற்சியாக நிறுவனம் ஒன்றைத் தொடங்குதல் எனப் புதிய அம்சங்களில் புதிய பாதைகளை அமைக்கும் வகையில் சிங்கப்பூரர்கள் வர்த்தகம் புரிவதைச் சுட்டினார் அவர்.
விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 60 சிங்கப்பூரர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தாம் வெளிநாட்டுவாழ் சிங்கப்பூரர்களைச் சந்திக்கும் வாய்ப்பை எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.

