சிங்கப்பூரைக் கட்டி நிறுவிய மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரைச் சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ள புதிய பத்து வெள்ளி நாணயங்களைச் சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்டுள்ளது.
"திரு லீயின் உத்திபூர்வ தொலைநோக்குச் சிந்தனை, துணிச்சல், தளராத உற்சாக உணர்வு போன்றவற்றால் வட்டார வர்த்தகத் துறைமுகமாக இருந்த சிங்கப்பூர் அனைத்துலக அளவிலான உற்பத்தி, வர்த்தக, நிதி மையமாக உருமாற்றம் கண்டுள்ளது. அதற்அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த நாணயம் அமைந்துள்ளது," என்று ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இதை நினைவுப்பொருளாக வைத்துக்கொள்வதற்காக பொன்னிறத்தில் ஒளிரும் இந்த 30 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட நாணயம் அலுமினிய வெண்கலத்தில் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது. அத்துடன் இந்தச் சிறப்பு நாணயத்தைப் பணமாகவும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நாணயத்தின் ஒருபக்கம் சிங்கப்பூரின் வானளாவிய கட்டடங்கள் பின்னணியில் இருக்க, அமரர் லீயின் முகத்தோற்றமும் மரினா அணைக்கட்டும் அதில் இடம்பெற்றுள்ளன.
மறுபக்கத்தில் 'கோட் ஆஃப் ஆர்ம்ஸ்' மரபுச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் ஒருகோணத்தில் இருந்து பார்த்தால் '1923' என்றும் இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால் '2023' என்றும் தெரியுமாறு நாணயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் ஐந்து நாணயங்கள்வரை வாங்குவதற்கு விண்ணப்பம் செய்யலாம். நேற்று தொடங்கி வரும் ஜூன் 9ஆம் தேதிவரை https://go.gov.sg/lky100coin-order என்ற இணையப்பக்கம் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே நாணயங்களுக்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர் தமது அடையாள அட்டை எண், கைப்பேசி எண், நாணயங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் வங்கிக்கிளை ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் கிடைத்ததும் அதுகுறித்து குறுஞ்செய்திவழி தகவல் அனுப்பப்படும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது முன்பணம் ஏதும் செலுத்தத் தேவை இல்லை.
இருப்பினும் ஐந்து நாணயங்கள்வரை பெற்றுக்கொள்ள விரும்பினாலும் தேவை அதிகமாக இருந்தால் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்றும் விண்ணப்பதாரருக்குக் குறைந்தது ஒரு நாணயமாவது உறுதியாக வழங்கப்படும் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியது.