தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்திலும் மனிதவள மேம்பாட்டிலும் அணுக்கமாக ஒத்துழைக்க சிங்கப்பூரும் தென்னாப்பிரிக்காவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
இதன் தொடர்பில் பிரதமர் லீ சியன் லூங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா முன்னிலையில் கேப்டவுனில் நேற்று இரண்டு புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாயின.
பிரதமர் லீ தென்னாப்பிரிக்காவிற்கும் கென்யாவிற்கும் ஆறுநாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கத் தலைநகர் கேப்டவுனில் உள்ள அதிபர் அலுவலகத்தில் நேற்று பிரதமர் லீக்கு 19 குண்டுகள் முழங்க மரியாதை அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தானபின் இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
சிங்கப்பூரும் தென்னாப்பிரிக்காவும் ஏற்கெனவே வலுவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ள நிலையில், இவ்விரு உடன்பாடுகளும் புதிய, முன்னோக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.
வேளாண்வணிகம், நகர்ப்புறத் தீர்வுகள், விருந்தோம்பல், தயாரிப்பு, துறைமுகங்கள், தளவாடங்கள், புத்தாக்கம், தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் சிங்கப்பூர் நிறுவனங்கள் தென் ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வருவதை அவர் குறிப்பிட்டார்.
நீர் மேலாண்மை, மின்னிலக்கமயம், துப்புரவு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தியதாக திரு ராமபோசா தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவில் தொழில் வாய்ப்புகளை அறியவும் அந்நாட்டு நிறுவனங்களுடன் நீண்டகாலப் பங்காளித்துவம் செய்துகொள்ளவும் ஏதுவாக, பிரதமர் லீயின் இந்தப் பயணத்தில் 17 சிங்கப்பூர் நிறுவனங்களின் பேராளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சிங்கப்பூர், ஜோகனஸ்பர்க், கேப்டவுன் நகரங்களுக்கு இடையே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நாள்தோறும் விமானங்களை இயக்கி வருகிறது.
இந்நிலையில், விமானத் தொடர்புகள், முதலீடுகள், மின்னிலக்கத் தொடர்புகள் என மேலும் பல வழிகளிலும் இருநாடுகளும் உறவை இன்னும் அணுக்கமாக்க முடியும் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.
"தென்னாப்பிரிக்காவுடனான பங்காளித்துவத்தை மேலும் மேம்படுத்த சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது," என்று அவர் சொன்னார்.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னாப்பிரிக்க அதிகாரிகள் சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டத்தின்கீழ் இடம்பெற்றுள்ள பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ளதாகவும் திரு லீ குறிப்பிட்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து இருநாடுகளுக்கு இடையிலான வணிகம் 60 விழுக்காட்டிற்குமேல் கூடியுள்ளது. சென்ற ஆண்டில் அதன் மதிப்பு $2.7 பில்லியனுக்கும் அதிகமாக இருந்தது.
இருநாடுகளும் இவ்வாண்டில் தங்களுக்கு இடையிலான அரசதந்திர உறவுகளின் 30ஆம் ஆண்டைக் கொண்டாடுகின்றன.

