உக்ரேன் தலைநகர் கியவ்மீது ரஷ்யா நேற்று முன்தினம் இரவு கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆனாலும், ஆறு 'ஹைப்பர்சோனிக்' ஏவுகணைகள் உட்பட ரஷ்யா வீசிய 18 ஏவுகணைகளையும் தான் தாக்கி அழித்துவிட்டதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
இம்மாதத்தில் மட்டும் கியவ்மீது ரஷ்யா வான்வழியாக தாக்குதல் நடத்தியிருப்பது இது எட்டாவது முறை.
அண்மைய தாக்குதலில் குறைந்தது மூவர் காயமடைந்ததாகவும் குறைந்தது ஒரு கட்டடம் சேதம் அடைந்ததாகவும் கியவ் நகர மேயர் விட்டலி கிளிட்ஸ்கோ `டெலிகிராம்' சமூக ஊடகம் வழியாகத் தெரிவித்துள்ளார்.
"தாக்குதல் தீவிரமாக இருந்தது. குறுகிய நேரத்தில் அதிகமான ஏவுகணைகள் வீசப்பட்டன," என்று அவர் சொன்னார்.
"பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதே எதிரியின் நோக்கம். ஆயினும், கியவ் உள்ளிட்ட வடபகுதியில் அனைத்தும் எங்களின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளன," என்று கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் செர்கி நேவ் கூறினார்.
உக்ரேன் தாக்கி அழித்ததாகக் கூறும் ஏவுகணைகளில் 'கின்ஸால்' வகை ஏவுகணைகளும் அடங்கும். கடந்த 2018ல் அதனை அறிமுகப்படுத்தியபோது உலகின் எந்த வான்வழித் தற்காப்புக் கருவியாலும் அதனைச் சுட்டு வீழ்த்த முடியாது என்று ரஷ்ய அதிபர் புட்டின் கூறியிருந்தார்.

